சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற சூழலில், காங்கிரஸின் ஆதரவை விஜய் கோரினார். இதன் தொடர்ச்சியாக, 5 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் விஜய்யிடம் தங்கள் ஆதரவுக் கடிதத்தை 6ம் தேதி வழங்கினர்.
இது திமுகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டதாக பலரும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இதற்கிடையே தனிப்பெரும் கட்சியான தவெகவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுக்காததை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தவகையில் மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் செய்தபோது, அங்கு வந்த திமுகவினர், காங்கிரஸ் கட்சிக்காரர்களை ரோட்டில் விரட்டி விரட்டி தாக்கி ஓடவிட்டனர். மேலும் காங்கிரஸ் கட்சியின் கொடிகளையும் காலால் மிதித்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.
இந்தநிலையில் திமுக – அதிமுக இணைந்து ஆட்சி அமைக்கலாம் என்று வெளியான செய்திக்கு, காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் பதில் அளித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தன்னுடைய சமூக வலைதளத்தில், ” இரண்டு திராவிட கட்சிகள். வாழ்நாள் எதிரிகள். ஒரே இரவில் ஒன்றானார்கள்.
தமிழகத்திற்காக இல்லை. மதச்சார்பின்மைக்காக இல்லை. ஒரே ஒரு மனிதனை நிறுத்த, விஜய்யை வீழ்த்த நடக்கும் முயற்சியை காங்கிரஸ் தெளிவாக பார்த்தது, வெளியேறியது. ஆர்எஸ்எஸ் / பாஜகவின் பி-டீமுடன் சேர்ந்து கொண்ட உங்களை மதச்சார்பற்றவர் என்று சொல்ல முடியாது.
‘நிலையான அரசு’ என்பது இரண்டு பயந்த கட்சிகள் தங்கள் அதிகாரத்தை காக்கும் அரசியல் மொழி. காங்கிரஸ் சரியாகவே வெளியேறியது. திமுக இன்று தன் முகமூடியை கழற்றுமா? யார் துரோகி?”, என்று பதிவிட்டுள்ளார். ஆனால் திமுக – அதிமுக இரண்டு கட்சிகளும் அப்படியொரு எண்ணம் தங்களுக்கு இல்லை என்று தெரிவித்து விட்டன, என்பது குறிப்பிடத்தக்கது.
