நாகலாந்து மாநிலத்தில் ஆளுநராக இருந்தவர் இல.கணேசன். இவர் கடந்த மாதம் சென்னை வந்தார். கடந்த 8-ந் தேதி அதிகாலை 3 மணியளவில் அவருக்கு தலைச்சுற்றல் வந்து விழுந்ததில் காயம் ஏற்பட்டது. எனவே அவரை சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் தலையில் ரத்தக்கட்டு இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது உடல், தியாகராயநகரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் இன்று பிற்பகலில் அவரது உடல் இறுதி ஊர்வலத்துடன் கொண்டு செல்லப்பட்டு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.