Friday, October 10, 2025

புழல் சிறையில் இருந்து தஷ்வந்த் விடுதலை

கடந்த 2017-ம் ஆண்டு சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டு பின்னர் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தஷ்வந்த் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அதனைத்தொடர்ந்து உயர்நீதிமன்றம் உத்தரவின்பேரில் குண்டர் சட்ட நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு அவர் ஜாமீனில் வெளியேவந்தார்.

இதையடுத்து குன்றத்தூரில் பெற்றோருடன் வசித்து வந்த தஷ்வந்த், செலவுக்கு பணம் தராததால் தாய் சரளாவை சுத்தியலால் அடித்து கொன்றார். பின்னர் அவரது தங்கச்சங்கிலியை எடுத்துக்கொண்டு தலைமறைவானார். இதைத்தொடர்ந்து போலீசார் மும்பையில் பதுங்கியிருந்த தஷ்வந்தை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

சிறுமி கொலை வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டு, கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ந் தேதி, தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்து விடுதலை செய்ய உத்தரவிட்டது. இந்த தீர்ப்பினைத்தொடர்ந்து புழல் மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள் பிரிவில் அடைக்கப்பட்டிருந்த தஷ்வந்த் நேற்றிரவு விடுதலை செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News