காஷ்மீரில் புலம்பெயர் தொழிலாளி சுட்டுக்கொலை

808

பயங்கரவாதிகளால் வங்கி மேலாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், பட்காம் மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளி சுட்டுக்கொல்லப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

ஜம்மு காஷ்மீரில், கடந்த ஒரு மாதத்தில், முஸ்லிம் அல்லாத அரசு ஊழியர்கள் மூன்று பேர் உட்பட 8 பேர், பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் நேற்று மேலும் ஒரு வங்கி மேலாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

காஷ்மீரில் இலாகி டெஹட்டி வங்கியில் பணியாற்றி வந்த, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த விஜய் குமார் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வங்கி மேலாளரை துப்பாக்கியால் சுடும் அதிர்ச்சி சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், பட்காம் மாவட்டம் சந்தோரா என்ற இடத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் காஷ்மீர் விவகாரம் குறித்து நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.

அப்போது காஷ்மீரில் நிலவும் பதற்றமான சூழல் மற்றும் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில், காஷ்மீரில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பண்டிட் சமூகத்தினர் அரசு ஊழியர்களாக உள்ளனர்.

இவர்கள், தங்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்றால், காஷ்மீரில் இருந்து வெளியேறுவோம் என அறிவித்துள்ளனர்.

இதையடுத்து, காஷ்மீர் பண்டிட்டுகள் வசிக்கும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.