கர்நாடக மாநிலம் பெலகாவியில் கர்நாடக காங்கிரஸ் சார்பில் மத்திய அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது மத்திய பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். குறிப்பாக காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய சம்பவம் குறித்து பேசினார். இந்தியர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது என கூறினார்.
இதனிடையே, பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்திற்குள் நுழைந்த பாஜக வினர் சிலர் முதலமைச்சர் சித்தராமையா பேசிக்கொண்டிருந்தபோது கருப்பு கொடி காட்டினர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் ஏ.எஸ்.பி.யை அழைத்து, நீங்க என்ன பண்றீங்க? என கேள்வி கேட்டு கை ஓங்கியுள்ளார். இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.