நிலநடுக்கத்தாலும் அசைக்க முடியாது! கவனம் ஈர்க்கும் காட் குனி கட்டடங்கள்

236
Advertisement

1905ஆம் ஆண்டு இமாச்சல பிரதேச பகுதியில் 7.8 ரிக்டர் அளவுகோலில் பதிவான மோசமான நிலநடுக்கத்தில் பிரம்மாண்ட கட்டடங்கள் சரிந்து விழுந்த நிலையில், காட் குனி முறையில் கட்டப்பட்ட கட்டடங்கள் சேதமாகாமல் தாக்குபிடித்தன.

அப்பகுதியில் இதே முறையில் கட்டப்பட்டுள்ள நக்கர் கோட்டை 500 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. குல்லு மன்னர்களின் வாழ்விடமாக இருந்த இக்கோட்டை தற்போது சுற்றுலாத் தளமாக விளங்கி வருகிறது.

இந்திய மண்ணியல் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள இந்த கட்டடம் தேவதாரு மரங்களை inter locking முறையில் வைத்து கட்டப்பட்டதாகும்.

சிமெண்ட் போன்ற கலவை எதுவும் பயன்படுத்தாமல் கட்டப்படும் இந்த கட்டட முறை,கட்டடக் கலையில் ஒரு ஆச்சரியமாகவே பார்க்கப்படுகிறது.

சாம்பல் நிற கற்கள், மரப் பலகைகள் வைத்து கட்டப்படும் காட் குனி கட்டடங்கள் பழமையாக காட்சியளித்தாலும் உறுதித் தன்மை மாறாமல் இருந்து வியப்பை ஏற்படுத்தி வருகிறது.

கற்கள் கட்டுமானத்திற்கான எடையை கூட்டும் போது மிகவும் தாழ்வான புவியீர்ப்பு மையம் உருவாகிறது.

அதோடு சேரும் மரங்களின் நெகிழ்வு தன்மை கட்டடத்தை  உறுதியாக்கி நிலநடுக்க பாதிப்பு நிறைந்த பகுதிகளுக்கு ஏற்ற கட்டுமான முறையாக அமைகிறது.

கதவுகள், ஜன்னல்கள் ஆகியவை சிறியதாகவும் அவற்றை சுற்றி தடிமனான பகுதிகளும் கட்டமைக்கப் படுவதால், நிலநடுக்கத்தின் போது ஏற்படும் விசை நிலத்துக்கு எளிதில் கடத்தப்பட ஏதுவாக அமைகிறது.

ஒரு காலத்தில் இமாச்சல பிரதேசத்தில் பெரும்பாலான வீடுகள் இம்முறையில் கட்டப்பட்டு வந்த நிலை 2006ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வன உரிமை சட்டத்தால் மாறியது.

காட் குனி முறைக்கு தேவைப்படும் தேவதாரு மரங்கள் அதிக அளவு வெட்டப்படுவதை தவிர்க்க, ஒரு குடும்பம் 10 ஆண்டுகளுக்கு ஒரு மரத்தை பெற்றுக் கொள்ளலாம் என அரசு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது.

இதனால் இமாச்சல பிரதேசத்தின் தட்பவெப்ப சூழல், மக்களின் வாழ்க்கை முறை, பொருளாதார நிலைக்கு ஏற்ற நிலநடுக்கத்தில் இருந்து பாதுகாக்க கூடிய காட் குனி கட்டட முறைக்கு சாத்தியமில்லாத சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.