ரேஷன் அட்டைதாரர்களுக்கு அடித்தது ‘ஜாக்பாட்’! மத்திய அரசு அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக ஒரு சூப்பரான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரத்தை இன்னும் உயர்த்தி, வெளி மார்க்கெட்டில் வாங்கும் உயர்தர அரிசிக்கு நிகராக ‘இம்ப்ரூவ்ட் ரைஸ்'(improoved rice) எனப்படும் மேம்படுத்தப்பட்ட அரிசியை மக்களுக்கு வழங்க வேண்டும் என மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

சாமானிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் ரேஷன் அரிசியில் குருணை எனப்படும் உடைந்த அரிசியின் அளவு அதிகமாக இருப்பதாக நீண்ட காலமாகவே ஒரு குறை இருந்து வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்தப் புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழக ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்குப் பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசி என அவர்களின் தேவைக்கு ஏற்ப இலவசமாகவே அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக மாதம் ஒன்றுக்கு சுமார் 3 லட்சத்து 30 ஆயிரம் டன் அரிசி தமிழகத்திற்குத் தேவைப்படுகிறது. மத்திய அரசின் இந்திய உணவுக் கழகத்தின் சார்பாக, தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகமே நமது விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல்லைக் கொள்முதல் செய்கிறது.

பின்னர் அரசு மற்றும் தனியார் அரவை ஆலைகளில் இந்த நெல் அரிசியாக மாற்றப்பட்டு, மத்திய அரசின் தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய ஒதுக்கீட்டில் ஈடு செய்யப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

இப்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி, ரேஷனில் வழங்கப்படும் புழுங்கல் அரிசியில் 16 சதவீதம் வரையும், பச்சரிசியில் 25 சதவீதம் வரையும் உடைந்த அரிசி இருக்கலாம் என மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.

இந்த விதியால்தான் ரேஷன் அரிசியில் குருணை அதிகமாகக் காணப்பட்டது. ஆனால், இனி வழங்கப்படவுள்ள மேம்படுத்தப்பட்ட அரிசியில் இந்த அளவு அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

புதிய உத்தரவின்படி, புழுங்கல் அரிசியில் வெறும் 5 சதவீதம் மட்டுமே உடைந்த அரிசி இருக்க வேண்டும் என்றும், பச்சரிசியில் அதிகபட்சம் 10 சதவீதம் மட்டுமே உடைந்த அரிசி இருக்க வேண்டும் என்றும் தரக் கட்டுப்பாடு கடுமையாக்கப்பட்டுள்ளது.

உடைந்த அரிசியின் அளவு மிகக் குறைவாக இருக்கும் என்பதால், இனி ரேஷன் கடைகளில் கிடைக்கும் அரிசி பார்ப்பதற்கும் சமைப்பதற்கும் மிகவும் தரமானதாக இருக்கும்.

இந்த மேம்படுத்தப்பட்ட அரிசி விநியோகத் திட்டம் தற்போது ஆந்திரா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் சோதனை அடிப்படையில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் அடுத்த ஆண்டு முதல் இந்தப் புதிய தரமான அரிசி மக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது.

ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் ரேஷன் அரிசியின் தரம் இப்படி உயர்த்தப்படுவது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Related News

Latest News