இந்தியாவின் முன்னணி சிகரெட் தயாரிப்பு நிறுவனமான ஐடிசி (ITC), தனது பிரபலமான கோல்டு ஃப்ளேக் 69mm சிகரெட்டின் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளது. ஏற்கெனவே இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது முறையாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஐடிசி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கோல்டு ஃப்ளேக் 69mm சிகரெட்டின் ஒரு பாக்கெட் விலை ரூ.125-ல் இருந்து ரூ.135 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் ரூ.95-க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த சிகரெட் தற்போது ரூ.135 ஆக அதிகரித்துள்ளது. இதனால் புகைப்பிடிப்போர் கூடுதல் செலவைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் சிகரெட் மீதான வரி விதிப்பு மாற்றங்களே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. ஐடிசி நிறுவனத்தின் மொத்த சிகரெட் விற்பனையில் கோல்டு ஃப்ளேக் 69mm சிகரெட் மட்டும் 30 முதல் 35 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது.
இதற்கிடையே, செப்டம்பர் காலாண்டில் ஐடிசி நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஆண்டைவிட 20.1 சதவீதம் சரிந்து ரூ.4,137.12 கோடியாகப் பதிவாகியுள்ளது. சிகரெட் பிரிவின் லாபமும் 27 சதவீதம் குறைந்துள்ளது.
இந்தச் சரிவை ஈடுகட்டவே நிறுவனம் விலையை உயர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, ஐடிசி பங்கு விலையும் 2026-ல் இதுவரை 21.93 சதவீதம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
