குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று (நவம்பர் 13) பள்ளி மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவிக்கிறார்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதலமைச்சரின் உத்தரவின்படி அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உள்ளிட்ட 61,84,566 பேருக்கு கேக்குகள் வழங்க ரூ.9.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, நான்கு நிறுவனங்களிடமிருந்து உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகளுக்கு (FSSAI) உட்பட்ட கேக்குகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. கேக்குகளின் மாதிரிகள் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டுள்ளன. மேலும், அவை சுகாதாரமான முறையில் பாதுகாக்கப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
கேக்குகளுடன் அனைத்து மாணவர்களுக்கும் குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகளும் வழங்கப்பட உள்ளன. கேக்குகள் பாதுகாப்பாகச் சேமிக்கப்பட்டுள்ளனவா என்பதை கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதி செய்துள்ளனர்.
மேலும், மாவட்ட ஆட்சியர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் சிறப்புக் கண்காணிப்புக் குழுவினர் பள்ளிகளில் கேக் விநியோகத்தைத் தொடர்ந்து கண்காணிப்பார்கள். இந்நிலையில், முதலமைச்சர் விஜய் மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கி குழந்தைகள் தின வாழ்த்துகளைத் தெரிவிக்க உள்ளார்.
