துருக்கியை சிதைத்த ‘இஸ்ரேல்’! நெதன்யாகுவுக்கு சர்வதேச ‘பிடிவாரண்ட்’?

மத்திய கிழக்கு ஆசியாவில் இஸ்ரேல் மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே தற்போது ஒரு மிகப்பெரிய ராஜதந்திரப் போர் வெடித்துள்ளது.

“சர்வாதிகாரி”, “இனப்படுகொலை” போன்ற மிகக்கடுமையான வார்த்தைகளால் இரு நாட்டுத் தலைவர்களும் ஒருவரை ஒருவர் பகிரங்கமாகச் சாடிக்கொள்வது சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மோதல் வெறும் வார்த்தைப் போரோடு நின்றுவிடாமல், சட்ட ரீதியான நடவடிக்கையாகவும் உருவெடுத்துள்ளது. துருக்கி அரசு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக ஒரு சர்வதேசப் பிடிவாரண்ட்டைப் பிறப்பிக்குமாறு இன்டர்போல் அமைப்பைக் கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த மே மாதம் காசா நோக்கிச் சென்ற நிவாரணக் கப்பல்களை இஸ்ரேல் ராணுவம் இடைமறித்த விவகாரத்தில், நெதன்யாகு இனப்படுகொலை மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்துள்ளதாகத் துருக்கி குற்றம் சாட்டுகிறது.

துருக்கியின் இந்தக் குற்றச்சாட்டுகளைச் சற்றும் எதிர்பாராத நெதன்யாகு, துருக்கியின் இந்தச் செயல் ஒரு மிகப்பெரிய கபட நாடகம் என்று வர்ணித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிபர் எர்டோகன் ஒரு “சர்வாதிகாரி” என்றும், அவர் குர்திஷ் இன மக்களை ஒடுக்குவதோடு ஹமாஸ் போன்ற அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பவர் என்றும் மிகக்கடுமையாகப் பதிலடி கொடுத்துள்ளது.

சமீபத்தில் சிரியாவில் துருக்கி எல்லைக்கு அருகே உள்ள வான்படைத் தளம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல், இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான பகையை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

பிராந்தியத்தின் பாதுகாப்பைச் சீர்குலைக்கத் துருக்கி எடுக்கும் முயற்சிகளை முறியடிப்போம் என்று இஸ்ரேல் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

இந்த விவகாரத்தில் நெதன்யாகுவை மட்டுமல்லாமல்,அபெக் மோஸ்கோவிச் (Afek Moskovici) என்ற இஸ்ரேலிய ராணுவ வீரரையும் துருக்கி நீதிமன்றம் குறிவைத்துள்ளது.

காசாவில் உள்ள இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பிரிவு மற்றும் கட்டிடங்களை ராணுவ வாகனங்களைக் கொண்டு சிதைத்ததாக அவர் மீது கடுமையான புகார்கள் பதிவாகியுள்ளன.

இதுமட்டுமல்லாமல், இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென் கிவீர்(Itamar Ben-Gvir), பிடிபட்ட நிவாரணப் பணியாளர்களை மண்டியிட வைத்து, கைகளைக் கட்டி வைத்து கிண்டல் செய்யும் வீடியோவை வெளியிட்டது உலக நாடுகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கியின் இந்தச் சட்டப் போராட்டத்திற்குப் பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளன.

இந்த மோதலுக்குப் பின்னால் ஆழமான அரசியல் காரணங்களும் இருப்பதாகத் துருக்கி குற்றம் சாட்டுகிறது. இஸ்ரேலில் நடைபெறவுள்ள தேர்தலில் தனது செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்ளவே நெதன்யாகு இத்தகைய ஆக்ரோஷமான போக்கைக் கடைபிடிப்பதாக எர்டோகன் தரப்பு சாடுகிறது.

ஆனால், இஸ்ரேலோ துருக்கியின் மிரட்டல்களுக்குத் தாம் ஒருபோதும் பணியப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறது. இரு பெரும் சக்திகளுக்கு இடையே நிலவும் இந்தப் பகையால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் எப்போது என்ன நடக்கும் என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.

இந்த ராஜதந்திர யுத்தம் ஒரு முழு அளவிலான போராக மாறுமா அல்லது சர்வதேச அழுத்தங்களால் தணியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related News

Latest News