Saturday, July 19, 2025

நட்பு நாடான கத்தாரை ‘கதறவிட்ட’ ஈரான் பின்னணியில் அமெரிக்காவா?

கிட்டத்தட்ட 12 நாட்களாக நீடித்த ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் ஒருவழியாக தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் – ஈரான் இரண்டு நாடுகளும் தன்னுடைய பேச்சுக்கு மதிப்பளித்து, போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளித்ததாக பெருமையுடன் தெரிவித்தார்.

இதற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்ட நிலையில், முன்வைத்த காலை பின்வைக்க மாட்டோம் என்று ஈரான் அடம்பிடித்தது. பின்னர் டிரம்ப் கெஞ்சி கேட்டதால் போரை நிறுத்த ஒப்புக் கொள்கிறோம் என்று அறிவித்தது. இதனால் மத்திய கிழக்கில் தற்போது பதட்டம் வெகுவாக தணிந்துள்ளது.

இந்தநிலையில் நட்பு நாடான கத்தார் மீது, ஈரான் தாக்குதல் நடத்தியதற்கான பின்னணி தற்போது தெரியவந்துள்ளது அதுகுறித்து இங்கே பார்க்கலாம். கத்தார் நாட்டின் தோஹாவில் அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவத்தளம் அமைந்துள்ளது.

சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த ராணுவத்தளத்தில் 100 விமானங்கள் இருக்கின்றன. போர் விமானங்கள், ட்ரோன்களை கண்காணிக்க அமெரிக்கா இதை பயன்படுத்துகிறது. ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கான மையமாகவும் இது திகழ்கிறது. இதில் 10 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் பணியாற்றுகின்றனர்.

இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்காவும் ஈரானை அண்மையில் தாக்கியது. சொல்லப்போனால் ஈரானின் அணுசக்தி தளங்களை குறிவைத்து அமெரிக்கா இறங்கியடித்தது. இதனால் கொந்தளித்த ஈரான் அமெரிக்காவின் ஆட்டத்தை அடக்கிட, மேற்கண்ட ராணுவ தளத்தை குறிவைத்து தாக்கியது. இதனால் அதிர்ந்து போன டிரம்ப், வேறு வழியின்றி சமாதான முயற்சியை கையிலெடுத்து, தற்போது அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.

நட்பு நாடாக இருந்தும் கத்தார் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு இதுதான் காரணம். மறுபுறம் ஈரானின் இந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்து போன கத்தார் உடனடியாக தன்னுடைய வான்பரப்பை மூடியது. இதன் காரணமாக விமானங்களும் திருப்பி விடப்பட்டன. இதுகுறித்து கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மஜீத் அல்-அன்சாரி அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

அதில், ”மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானப்படைத் தளத்தின் மீது, ஈரானிய புரட்சிகர காவல்படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இது கத்தார் நாட்டின் இறையாண்மையையும், வான்வெளி சட்டத்தையும், சர்வதேச சட்டத்தையும் அப்பட்டமாக மீறியதாகும்,” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கத்தார் தாக்குதல் குறித்து டிரம்ப் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், ” கத்தாரில் உள்ள இராணுவத் தளத்தின் மீது ஏவுகணைகளை வீசுவதற்கு முன்னர் ஈரான் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்தது. அதனால் யாரும் உயிரிழக்கவில்லை. எந்த அமெரிக்கர்களும் பாதிக்கப்படவில்லை, எந்த சேதமும் ஏற்படவில்லை என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இனி வெறுப்பு இருக்காது என்று நம்புகிறேன். இனி ஈரான் அமைதி, நல்லிணக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இஸ்ரேலுக்கும் இதையே ஊக்குவிக்கிறேன். உலகிற்கு வாழ்த்துக்கள், இது அமைதிக்கான நேரம்! அமெரிக்காவால் இனி எந்த பதிலடியும் இருக்காது,” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news