அமெரிக்காவின் F-35-க்கு செக் வைத்த சீனா! பாகிஸ்தானுக்கு கொடுக்கும் வெறித்தனமான ‘ஆயுதம்’?

அமெரிக்காவின் அதிநவீன எஃப்-35 (F-35) போர் விமானங்களுக்குப் போட்டியாக, சீனா தனது ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமான ‘ஜே-35 ஏ.இ’ (J-35AE)-யை உலக நாடுகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை தனது சொந்தப் பயன்பாட்டிற்காக மட்டுமே இத்தகைய ரகசிய விமானங்களைத் தயாரித்து வந்த சீனா, இப்போது முதல்முறையாக வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்காகவே இந்த ‘எக்ஸ்போர்ட்’ ரக விமானத்தை உருவாக்கியுள்ளது.

இந்தச் சூழலில், சீனாவின் இந்த அதிநவீன போர் விமானத்தை வாங்கும் முதல் நாடாகப் பாகிஸ்தான் இருக்கும் என்று உளவுத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே சமீபத்தில் நிலவிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ வான்வழி மோதல்களுக்குப் பிறகு, இந்த விவகாரம் தெற்காசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் அரசுத் தொலைக்காட்சியில் அண்மையில் வெளியான காட்சிகளில், முழுமையாகத் தயாரான ‘001’ சீரியல் எண் கொண்ட ஜே-35 ஏ.இ (J-35AE) போர் விமானம் பொதுவெளியில் காட்டப்பட்டது. இதில் சீன விமானப்படையின் முத்திரை இல்லாமல், இதனைத் தயாரித்த ஏவியேஷன் இண்டஸ்ட்ரி கார்ப்பரேஷன் ஆஃப் சீனா (AVIC) நிறுவனத்தின் லோகோ மட்டுமே இடம்பெற்றுள்ளது. இதுவே இது விற்பனைக்கான விமானம் என்பதை உறுதிப்படுத்துகிறது.

மாக் 1.8 (Mach 1.8) வேகத்தில் பறக்கக்கூடிய இந்த விமானம், எதிரிகளின் ரேடார்களில் சிக்காத ஸ்டெல்த் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. மேலும், ஒரே நேரத்தில் பல இலக்குகளைக் குறிவைத்துத் தாக்கும் ஏ.இ.எஸ்.ஏ (AESA) ரேடார் மற்றும் கண்ணுக்குத் தெரியாத தூரத்தில் இருக்கும் இலக்குகளைத் தாக்கும் பி.எல்-15 (PL-15) ஏவுகணைகளையும் இது ஏந்தும் திறன் கொண்டது.

இந்த விமானத்தின் மற்றொரு வியக்கத்தக்க அம்சம் என்னவென்றால், இதன் உற்பத்தி வேகம் மற்றும் விலைதான். அமெரிக்காவின் எஃப்-35 விமானங்களை விட மிகக் குறைந்த விலையில், அதாவது சுமார் 35 முதல் 80 மில்லியன் டாலர் மதிப்பிலேயே இது விற்பனைக்கு வருகிறது.

மேலும், வெறும் 72 மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு புதிய விமானத்தைத் தயாரித்து வெளியிடும் அளவுக்குச் சீனாவின் தொழிற்சாலைகள் தயாராக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பாகிஸ்தான் சுமார் 40 ஜே-35 விமானங்களை வாங்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக அந்நாட்டு விமானிகள் ஏற்கனவே சீனாவில் பயிற்சியைத் தொடங்கிவிட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் இந்தத் தகவல்களை ‘வெறும் ஊடகச் செய்திகள்’ என்று கூறி தற்போதைக்கு மழுப்பி வருகிறார். ஆனால், சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான எல்லைப் பதற்றங்கள் மற்றும் பாகிஸ்தானின் வான்வழிப் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால், இந்த ஒப்பந்தம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால், தெற்காசியப் பிராந்தியத்தில் வான்வழி ஆதிக்கத்தைச் செலுத்தும் இந்தியாவின் முயற்சிக்கு இது சவாலாக அமையலாம் என்று ராணுவ ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Related News

Latest News