நமக்கு தெரிந்தபடி, ஒரு நாள் என்பது 24 மணி நேரம் தான். ஆனால், சில நேரங்களில் அந்த நாள் சற்று குறையலாம் என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆம்…இந்த 2025ஆம் ஆண்டு, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், பூமியின் சுழற்சி வேகம் சாதாரணத்தைவிட சிறிது அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, ஜூலை 9, ஜூலை 22 மற்றும் ஆகஸ்ட் 5-ம் தேதிகளில் பூமி வேகமாக சுழல வாய்ப்புள்ளது.
இதனால் அந்த நாட்களில் ஒரு நாள் சுமார் 1.3 முதல் 1.5 மில்லி விநாடிகள் வரை குறைவாக இருக்கும். அதாவது, 24 மணி நேரம் என்ற நாள் சிறு அளவுக்கு சுருக்கப்படும். இந்த மாற்றம் 2020 முதல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
உதாரணமாக, 2024 ஜூலை 5-ஆம் தேதி பூமி 1.66 மில்லி விநாடிகள் குறைவாக சுழன்றது, இது இதுவரை பதிவு செய்யப்பட்ட குறைந்த நாள் நீளம் ஆகும்.
2025-இல் இந்த வேகம் மேலும் அதிகரித்து, ஆகஸ்ட் 5 அன்று 1.51 மில்லி விநாடிகள் குறைவாக இருக்கும் என விஞ்ஞானிகள் கணிக்கின்றனர். ஆனால் , பூமியின் சுழற்சி வேகம் ஏன் இவ்வாறு வேகமாகிறது என்று முழுமையாக தெரியவில்லை.
விஞ்ஞானிகள் கூறுவது போல், பூமியின் உள்ளே உள்ள கோரத்தின் இயக்கம், கடல் நீரின் நிலைகள், பனிக்கட்டிகள் உருகுதல் மற்றும் வளிமண்டல மாற்றங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம். மேலும் நிலவின் பாதையும் இந்த வேகத்தில் சிறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த சுழற்சி வேக மாற்றம் காரணமாக GPS, செயற்கைக்கோள்கள் மற்றும் அணுக்களஞ்சியங்கள் போன்ற தொழில்நுட்பங்களில் சிறு சிக்கல்கள் ஏற்படலாம். இதனால் நேரக் கணக்குகளை பூமியின் உண்மையான சுழற்சிக்கு ஒத்திசைக்க, Leap Second எனப்படும் நொடியை சேர்க்க அல்லது நீக்க 2029-ல் நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம்.
Leap Second என்றால் என்ன? தெரியுமா?
Leap Second என்பது, சாதாரண நிமிடமான 60 வினாடிகளுடன் ஒரு வினாடி கூடுதலோ குறைவோ சேர்க்கப்படும் ஒரு சிறு நேர திருத்தம் ஆகும். இதன் மூலம், பூமியின் உண்மையான சுழற்சி நேரம் மற்றும் atomic clock எனப்படும் அணுகடிகாரத்தின் நேரம் ஒத்திசைக்கப்படும்.
மொத்தமாக, பூமியின் சுழற்சி வேகம் இயற்கையான முறையில் மாறிக்கொண்டே இருக்கும். இவ்வாறு வேகமான மாற்றம் தற்போது ஒரு புதுமையான விஞ்ஞான சவாலாக உள்ளது. நாம் நிலையானது என்று கருதும் “நேரம்” கூட இயற்கையின் பல காரணிகளால் சிறு அளவில் மாறிவரும். இதை சரியாக கண்காணித்து, அதற்கேற்ற தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதே இன்றைய காலத்திற்கான அவசியமாக பார்க்கப்படுகிறது.