Monday, February 2, 2026

உடல் எடையை குறைக்க ஆப்பிள் சீடர் வினிகரை குடிப்பது நல்லதா? உண்மை என்ன?

உடல் எடை குறைப்பு முயற்சிகளில் பலர் ஆப்பிள் சீடர் வினிகரை பயன்படுத்தி வருகின்றனர். இது உடலில் உள்ள கொழுப்பை வேகமாக எரிக்கும் சக்தி கொண்டது என்று பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால், மருத்துவ நிபுணர்கள் இந்த கருத்தை ஏற்றுக்கொள்வதில்லை. ஆப்பிள் சீடர் வினிகரை அதிகமாக பயன்படுத்துவது குடல் மற்றும் வயிற்று அமைப்பில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

ஆப்பிள் சீடர் வினிகர் தயாரிக்கும் முறையைப் பார்க்கும்போது, நன்கு பழுத்த இனிப்பான ஆப்பிள்களை சாறாக பிழிந்து, அதில் ஈஸ்ட் சேர்க்கப்படுகிறது. இதனால் ஆப்பிளில் உள்ள சர்க்கரை ஆல்கஹாலாக (எத்தனால்) மாறுகிறது. பின்னர், குறிப்பிட்ட பாக்டீரியாக்கள் சேர்க்கப்பட்டு, அந்த ஆல்கஹால் அசிட்டிக் அமிலமாக மாற்றப்படுகிறது. இதுவே வினிகர் ஆகும்.

இந்த வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம் பசியை அடக்கும் தன்மை கொண்டது. இதனால், இரத்த சர்க்கரை அளவை ஓரளவு கட்டுப்படுத்த உதவலாம். ஆனால், கொழுப்பை வேகமாக எரித்து ஆரோக்கியமான முறையில் எடை குறைக்கிறது என்பதற்கு போதுமான அறிவியல் ஆதாரங்கள் இல்லை.

தினமும் வெறும் வயிற்றில் ஆப்பிள் சீடர் வினிகரை குடிப்பதால், அதன் அதிகமான அமிலத்தன்மை வயிறு மற்றும் குடலின் உள்பகுதியை சேதப்படுத்தும். இதன் விளைவாக, குமட்டல், நெஞ்செரிச்சல், அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். நேரடியாக குடிப்பதால் தொண்டையில் எரிச்சல் அல்லது புண் உருவாகும் அபாயமும் உள்ளது. மேலும், பல் எனாமல் பாதிப்பு, தொண்டை வலி மற்றும் வயிற்று கோளாறுகள் ஏற்படலாம்.

நீண்ட காலமாக இதைப் பயன்படுத்தினால், உடலில் பொட்டாசியம் அளவு குறைய வாய்ப்பு உள்ளது. இதனால் தசை பலவீனம், அதிக சோர்வு மற்றும் இதய செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படலாம்.

குறிப்பாக, நீரிழிவு நோயாளிகள் ஆப்பிள் சீடர் வினிகரை உட்கொள்வது மிகவும் ஆபத்தானது. அதேபோல், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது சிறுநீரகங்களுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தி, உடல்நலத்தை மேலும் மோசமாக்கலாம்.

மொத்தத்தில், எடை குறைப்பு என்ற பெயரில் எந்தவொரு உணவு அல்லது பானத்தையும் சுயமாக எடுத்துக்கொள்வதற்கு முன், மருத்துவரின் ஆலோசனை பெறுவது தான் பாதுகாப்பான வழியாகும்.

Related News

Latest News