AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் கண்ணாடிகள் தற்போது ஆன்லைன் விற்பனை தளங்களில் கிடைக்கத் தொடங்கியுள்ளன. 4K கேமிரா, குரல் பதிவு, மொழிபெயர்ப்பு, ப்ளூடூத் இணைப்பு போன்ற பல அம்சங்களுடன் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
புகைப்படம் எடுப்பது, வீடியோ பதிவு செய்வது, அழைப்புகளை எடுப்பது, நிராகரிப்பது, குரல் பதிவு செய்வது, ஆன்லைன் கேம்ஸ் விளையாடுவது என ஸ்மார்ட் ஃபோனின் பெரும்பாலான செயல்பாடுகளையும் இந்த கண்ணாடிகள் செய்யக்கூடியதாக உள்ளன.
சில மாதங்களுக்கு முன், மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், “ஸ்மார்ட்போன்களின் காலம் முடிந்தது; எதிர்காலம் ஸ்மார்ட் கண்ணாடிகளுக்கே” எனக் கூறி, ரே-பான் நிறுவனத்துடன் இணைந்து AI கண்ணாடியை அறிமுகப்படுத்தினார். அந்த கண்ணாடி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தியாவில் அதன் விலை சுமார் ரூ.70,000க்கும் மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, சீனாவின் டோம்ஹாங் நிறுவனம் குறைந்த விலையில் AI கண்ணாடிகள் மற்றும் AI மோதிரங்களை தயாரித்து, அமேசான் போன்ற தளங்களில் ரூ.8,079க்கு விற்பனை செய்து வருகிறது.
Chat GPT மூலம் இயங்கும் இந்த கண்ணாடியில் 164 மொழிகளை மொழிபெயர்க்கும் வசதி, கேமிரா மூலம் காட்சி பதிவு செய்யும் திறன், உரையாடலை குரல் பதிவாக சேமித்து எழுத்தாக்கும் அம்சம் உள்ளது. மேலும் UV பாதுகாப்பு மற்றும் நீல ஒளி எதிர்ப்பு வசதி இருக்கிறது. இதை ஒரு மணிநேரம் சார்ஜ் செய்தால் 200 மணிநேரம் பயன்படுத்தலாம்.
ஆனால், அனுமதியின்றி புகைப்படம், வீடியோ அல்லது உரையாடலை பதிவு செய்யும் அபாயம் இருப்பதால், தனிமனித உரிமை பாதிக்கப்படும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. தொழில்நுட்ப முன்னேற்றம் வரமாக இருந்தாலும், தவறான பயன்பாடு பெரும் சவால்களை உருவாக்கக்கூடும்.
