அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் பொருட்களை தொடர்ச்சியாக இறக்குமதி செய்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 50 சதவீதம் வரி விதிக்கும் முடிவை எடுத்துள்ளார். இந்த அதிரடி நடவடிக்கை தற்போது அமலுக்கு வந்துள்ளது.
இந்திய அரசு, இந்த வரி அதிர்ச்சியால் உள்ளூர் வர்த்தகம் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ளது.
- GST சலுகை மாற்றம்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் GST விதிகளில் மாற்றம் செய்து, சலுகைகளை அறிவித்துள்ளது.
- புதிய சந்தைகள் நோக்கி விரிவாக்கம்: அமெரிக்க சந்தையைத் தவிர்த்து, இந்தியா தனது டெக்ஸ்டைல் மற்றும் பிற முக்கிய பொருட்களின் ஏற்றுமதியை ரஷ்யா, ஜெர்மனி, பிரிட்டன், ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. தூதரக மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
- தரம் மற்றும் புதுமையில் கவனம்: “இந்திய டெக்ஸ்டைல், தரம் மற்றும் நிலைத்தன்மையில் உலகளவில் தனி முத்திரை பதிக்கும்” என்ற நம்பிக்கையுடன், மேம்பட்ட வடிவமைப்பு, eco-friendly உற்பத்தி, மற்றும் தொழில்நுட்ப புதுமைகளை கொண்டு சர்வதேச சந்தையில் போட்டியிட இந்தியா திட்டமிட்டுள்ளது.
- உள்ளூர் தொழில் பாதுகாப்பு: உள்ளூர் சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அதாவது MSME அதிகம் பாதிக்கப்படாமல் இருக்க, மத்திய அரசு வங்கி கடன் எளிதாக்கம், உற்பத்தி ஊக்குவிப்பு, மற்றும் ஏற்றுமதி ஊக்கத்தொகை திட்டங்களை செயல்படுத்தப் போவதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பொருளாதார நிபுணர்கள், “டிரம்பின் இந்த 50% வரி, குறுகிய காலத்தில் இந்தியாவுக்கு பாதிப்பு அளிக்கலாம். ஆனால், நீண்ட காலத்தில் இந்தியா தனது ஏற்றுமதி வலையமைப்பை பரவலாக்கினால், ஒரே சந்தையை சார்ந்திருக்கும் நிலை குறையும்” என்கிறார்கள்.
இது மட்டுமல்லாமல் டிரம்பின் 50% வரி விதிப்பு, இந்தியாவுக்கு ஒரு சவாலாக இருந்தாலும், அதற்கு இந்தியா தன்னம்பிக்கையுடன் பதிலடி கொடுக்கத் தயாராகியுள்ளது. வரி அதிர்ச்சியை எதிர்கொண்டு, இந்தியா உலகளவில் தனது பொருளாதார அடையாளத்தை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.