இந்தியா மீது ட்ரம்ப் 50 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில், நாமும் பதிலடியாக அவர்களின் பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் சசி தரூர் கூறியதாவது : இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 50 சதவீத வரியை அறிவித்துள்ள நிலையில் அமெரிக்க பொருட்களின் இறக்குமதி மீது இந்தியா சராசரியாக 17 சதவீதம் மட்டுமே வரி விதிக்கிறது. அமெரிக்காவின் இந்த ஒரு தலைபட்சமான நடவடிக்கைக்கு பதிலடியாக நாமும் அமெரிக்க பொருட்களுக்கான வரியை 50 சதவீதம் அளவுக்கு உயர்த்த வேண்டும்.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதில் இந்தியாவை காட்டிலும் சீனாவின் பங்கு ஏறக்குறைய இரண்டு மடங்காக உள்ளது. ஆனால், இறக்குமதி தொடர்பாக முடிவெடுக்க சீனாவுக்கு 90 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், நமக்கு வெறும் மூன்று வாரங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. இதிலிருந்து இந்தியாவை எந்த இடத்தில் அமெரிக்கா வைத்துள்ளது என்பதை அறிந்து அதற்கேற்ப நாம் எதிர்வினையாற்ற வேண்டும்” என்று சசி தரூர் கூறினார்.