இந்தியா இந்தியாதான்
நெகிழ வைக்கும் வரலாற்று வீடியோ

332
Advertisement

ரஷ்யா- உக்ரைன் போர் உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில்,
இந்தியாவின் உயர்ந்த குணத்தை உலகுக்கு எடுத்துக்காட்டும் வரலாற்று
வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

1939 ஆம் ஆண்டு, செப்டம்பர் 1 ஆம் தேதி ஜெர்மனியை ஆண்டுகொண்டிருந்த
ஹிட்லர், போலந்து நாட்டின்மீது போர்தொடுத்தார். ஹிட்லரின் நாடு பிடிக்கும்
ஆசையால் அது உலகப்போராக மாறியது. அந்தப் போரில் 10 கோடி வீரர்கள்
ஈடுபட்டனர்.

அப்போது போலந்து நாட்டைச்சேர்ந்த 500 பெண்கள், 200 சிறார்களைப்
போலந்து ராணுவம் ஒரு கப்பலில் ஏற்றிப் பாதுகாப்புத் தேடி ராணுவம்
அனுப்பி வைத்தது. கப்பல் புறப்படும்முன் கேப்டனை அழைத்த ராணுவத்
தளபதி, ”எந்த நாட்டில் தங்க அனுமதிக்கிறார்களோ அந்த நாட்டுக்குக்
கொண்டுசெல்லுங்கள்” என்று உத்தரவிட்டார்.

‘உயிருடன் இருந்தாலோ தப்பிப் பிழைத்தாலோ மீண்டும் சந்திப்போம்’ என்று
கப்பலில் இருந்தவர்கள் தங்கள் குடும்ப ஆண்களிடம் கண்ணீர் மல்கக்கூறி
விடைபெற்றனர்.

அகதிகளாகப் புகலிடம் தேடிச்சென்ற அந்த 700 பேருக்கும் பெரும்பாலான
ஐரோப்பிய நாடுகளும் ஆசியாக்கண்ட நாடுகளும் அனுமதி மறுத்துவிட்டன.

அதனால் தொடர்ந்து பயணிக்கத் தொடங்கிய அந்தக் கப்பல் அடுத்து
அடைந்த இடம் வெகுதொலைவில் இருந்த ஈரான் துறைமுகம். அவர்களுக்குப்
புகலிடம் தர ஈரானும் மறுத்துவிட்டது.

கடைசியாக அந்த நாடோடிக் கப்பல் அடைந்த இடம் இந்தியா. பாம்பே
துறைமுகத்தை அடைந்தது புகலிடம் தேடிவந்த அந்தக் கப்பல். அப்போது
இந்தியாவை பிரிட்டன் ஆண்டுகொண்டிருந்தது. அதன் கவர்னராக இருந்தவரும்
இந்தியாவுக்குள் கப்பலை அனுமதிக்க மறுத்துவிட்டார்.

இந்தத் தகவல் ஜாம்நகர் மஹாராஜா ஜாம்ஷாஹிப் திக்விஜய் சிங்கின்
காதுகளைச் சென்றடைந்தது. அகதிகளின் நிலை அறிந்து மிகுந்த கவலையில்
ஆழ்ந்தார் மஹாராஜா.

அவர் தன்னுடைய ஆளுகைக்கு உட்பட்டிருந்த ஜாம்நகர் அருகே இருந்த
துறைமுகத்துக்குள் அந்த அகதிகள் கப்பலை அனுமதித்தார்.

700 போலந்து அகதிகளுக்கும் தங்க இடம்கொடுத்தார். அத்துடன் அந்த
200 சிறார்களுக்கும் தன் ராஜ்ஜியத்தில் இருந்த ராணுவப் பள்ளிக்கூடத்தில்
பயில இலவசக் கல்வியும் வழங்கினார்.

அந்த அகதிகள் அனைவரும் இரண்டாம் உலகப்போர் முடியும்வரையில்,
சுமார் 9 ஆண்டுகள் ஜாம்நகர் மஹாராஜா திக்விஜய் சிங்கின் நாட்டிலேயே
பாதுகாப்பாக, நிம்மதியாகத் தங்கியிருநதனர். அவர்கள் தங்கியிருந்த
இடத்துக்கு மஹாராஜா அடிக்கடி சென்று அவர்கள் மனநிறைவாக
வசிப்பதை உறுதிசெய்தார்.

இதனால் மனம் உருகிப்போன போலந்து அகதிகள் அனைவரும்
மஹாராஜாவை ‘பாபு’ என்று அன்பொழுக அழைத்து மகிழ்ந்தனர்.

போர் முடிவுற்ற நிலையில், அகதிகள் அனைவரும் தங்கள் சொந்த
நாட்டுக்குச் சென்றனர். பின்னாளில் அந்த அகதிகளுள் ஒருவர்
போலந்து நாட்டின் பிரதமர் ஆகவும் உயர்ந்தார்.

இன்றும்கூட அந்த அகதிகளின் சந்ததியினர் ஆண்டுதோறும் ஜாம்நகருக்கு
வந்து தங்கள் முன்னோர்களை நினைவு கூர்ந்துவருகின்றனர்.

போலந்து நாட்டின் தலைநகர் வார்ஷாவின் பல தெருக்கள் ஜாம்நகர்
மஹாராஜா திக்விஜய் சிங்கின் பெயரைத் தாங்கியுள்ளன. அந்நாட்டு
அரசு பல திட்டங்களுக்கு திக்விஜய் சிங்கின் பெயரைச் சூட்டி தாங்கள்
நன்றி மறவாதவர்கள் என்பதைத் தொடர்கிறது..

ஒவ்வோராண்டும் போலந்து நாட்டு நாளிதழ்கள் ஜாம்நகர் மஹாராஜா
திக்விஜய் சிங்கைப் பற்றிப் பக்கம் பக்கமாகக் கட்டுரைகள் வெளியிட்டு
தங்கள் நன்றி உணர்வை வெளிப்படுத்தி வருகின்றன.

உலகுக்கு இந்தியா தரும் செய்தி என்னவென்றால், வசுதேவ குடும்பம்
என்பதே. அதாவது, உலகமே ஒரு குடும்பம் என்பதுதான் இதன் அர்த்தம்..

உலகமே ஒரு குடும்பம் என்கிற உயர்ந்த சிந்தனை அனைவர் மனதிலும்
வந்துவிட்டால், ரஷ்யா உக்ரைன் போர் மட்டுமல்ல, உலகின் எந்த பந்தப்
பகுதியிலும் போர் என்கிற வார்த்தையே காணாமல் போய்விடுமே….

இந்தியாவின் உயர்ந்த குணம் உதவும் குணம் இப்போதுதான் உலகுக்குப்
புரியவந்துள்ளது.