வீடு,நிலம் வாங்குபவர்களுக்கு முக்கிய செய்தி!! தமிழக அரசின் அதிரடி ‘குட் நியூஸ்’!

தமிழகத்தில் நிலம் மற்றும் வீடுகள் வாங்குவோருக்கு ஒரு மிக முக்கியமான, அதே சமயம் மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. பத்திரப் பதிவு செய்த பிறகு பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக இனி மாதக்கணக்கில் அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய அவசியமில்லை.

வெறும் 7 நாட்களுக்குள் ஆன்லைன் மூலமாகவே பட்டா பெயர் மாற்றத்தைப் பெறுவதற்கான புதிய நடைமுறையைத் தமிழக வருவாய்த்துறை தற்போது செயல்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளது. நிர்வாக ரீதியான காலதாமதங்களைக் குறைக்கவும், பொதுமக்களின் சிரமங்களைக் களையவும் எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வழக்கமாகத் தமிழகத்தில் நிலம் அல்லது வீடு வாங்குபவர்கள், பத்திரப் பதிவு செய்யும் போதே பட்டா மாறுதலுக்கும் விண்ணப்பிக்க முடியும். நில உட்பிரிவு தேவையில்லாத இடங்களில், தானியங்கி முறையில் பட்டா மாறுதல் செய்யும் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருந்தாலும், அதில் பல படிநிலைகள் இருந்ததால் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.

குறிப்பாக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோரின் நேரடி ஆய்வு மற்றும் ஒப்புதலுக்காகக் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவியது. இதனைச் சரிசெய்யும் வகையில், வருவாய்த்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்கள் நடத்திய உயர்மட்ட ஆலோசனைக்குப் பிறகு, பட்டா மாறுதலுக்கான சரிபார்ப்பு நிலைகள் நான்கிலிருந்து இரண்டாக அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

புதிய நடைமுறையின்படி, நிலம் வாங்குபவர் மற்றும் விற்பனை செய்பவரின் ஆதார் தகவல்கள் முதலில் சரிபார்க்கப்படும். அதனைத் தொடர்ந்து சார்பதிவாளர் ஒப்புதல் அளித்தவுடன், அந்த விவரங்கள் பதிவுத் துறையின் இணையதளத்திலிருந்து நேரடியாக வருவாய்த்துறையின் “தமிழ் நிலம்” மென்பொருளுக்கு மாற்றப்படும்.

இனி இடையில் எந்தவொரு அதிகாரியின் தலையீடும் இன்றி, சார்பதிவாளர் அங்கீகரித்த கோப்புகள் நேரடியாக வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மண்டல துணை வட்டாட்சியருக்குச் செல்லும். அவர் அதனை ஆய்வு செய்து ஒப்புதல் அளித்த அடுத்த நொடியே பட்டா பெயர் மாற்றம் முழுமையடையும்.

இந்த நடைமுறை முடிந்தவுடன் விண்ணப்பதாரரின் மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலமாகத் தகவல் தெரிவிக்கப்படும். பட்டா மாறுதல் தொடர்பான சான்றிதழ்களை டிஜிட்டல் முறையில் நேரடியாக விண்ணப்பதாரர்களுக்கே அனுப்பும் அடுத்தகட்ட வசதியையும் மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் இடைத்தரகர்களின் தலையீடு முற்றிலுமாக ஒழிக்கப்படுவதுடன், வெளிப்படையான மற்றும் வேகமான நிர்வாகம் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

Related News

Latest News