சொந்த வீடு என்பது நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்நாள் கனவாகும். அரசாங்கம் சொந்த வீடு இல்லாதவர்களுக்கான பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில், 2015 ஆம் ஆண்டு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது, இந்த திட்டம் தொடர்பான ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது.
2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அந்த பட்ஜெட்டில் பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் மற்றும் இரண்டாம் தர நகரங்களில் வீடுகள் அதிக அளவில் கட்டப்பட வேண்டியதால், கூடுதல் நிதி ஒதுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் பிஎம் ஆவாஸ் யோஜனா மூலம் வீடுகள் கட்டும் பணிகள் விரைவாக நடைபெறும்.
பிஎம் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீட்டு கடன் வழங்கப்படுகிறது. ரூ. 25 லட்சம் வரை உள்ள தொகை, 4 சதவீத வட்டி மானியத்துடன் கிடைக்கும். மானியம் ஐந்து ஆண்டு தவணைகளில் வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு ஆன்லைனில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மற்றும் பொது சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்.