மீண்டும் அரியணை ஏறுகிறதா திமுக? விஜய்யின் பொசிஷன் என்ன? தலைகீழ் மாற்றத்துடன் எக்ஸிட் போல்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. 234 தொகுதிகளுக்கான இந்த தேர்தலின் முடிவுகள் மே 4ம் தேதி வெளியாக உள்ளதால் அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள திமுக தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வர, ஆட்சியை கைப்பற்ற அதிமுகவும் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. இதனுடன், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சியும் பலத்த போட்டியில் களத்தில் உள்ளன.


இம்முறை தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. திமுக, அதிமுக, தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் ஆகிய கட்சிகள் நேரடியாக மோதுகின்றன. மேலும் ராமதாஸ் மற்றும் சசிகலா தனி கூட்டணியை அமைத்து தேர்தலை சந்தித்துள்ளனர். மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டுள்ளனர். ஆட்சியை அமைக்க 117 தொகுதிகளில் வெற்றி பெறுவது அவசியமாகும்.
இறுதி வாக்காளர் பட்டியலின்படி சுமார் 5.73 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். இவர்களில் சுமார் 85 சதவீதம் பேர் வாக்களித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நடிகர் விஜய் முதல் முறையாக தமிழக வெற்றி கழகம் மூலம் அரசியல் களத்தில் இறங்கியிருப்பது இந்த தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். திமுக, அதிமுக ஆகிய இரு முக்கிய கட்சிகளின் வாக்கு வங்கியிலும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்பதால், வெற்றி யாருக்கு என்பது கணிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பான எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகியுள்ளன. பீப்பிள் பல்ஸ் நிறுவனம் வெளியிட்ட கணிப்பின்படி, திமுக 125 முதல் 145 தொகுதிகள் வரை வென்று மீண்டும் ஆட்சியமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக 65 முதல் 80 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது.


நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 18 முதல் 24 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், மற்ற கட்சிகள் 2 முதல் 6 தொகுதிகள் வரை பெறும் என்றும் அந்த கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாக்கு சதவீத அடிப்படையில் திமுக 38.4%, அதிமுக 31.5%, தமிழக வெற்றி கழகம் 23.6%, மற்றவர்கள் 6.5% வாக்குகளையும் பெறலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Related News

Latest News