தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் துணை ஆட்சியர், DSP., வணிக வரி உதவி ஆணையர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் என உள்பட குரூப்-1 பணியிடங்களில் 70 காலியிடங்களும், குரூப்-1ஏ பணியிடங்களில் உதவி வனப் பாதுகாவலர் பதவியில் 2 காலியிடங்களையும் நிரப்பும் வகையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் தேர்வு நடத்தப்பட்டது.
இந்தத் தேர்வுக்கு தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் விண்ணப்பித்ததாக தெரிவித்தனர். இதற்காக மாநிலம் முழுவதும் 44 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, 987 தலைமைக் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது.
இந்த நிலையில் தற்போது குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வர்கள் TNPSC அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்கள் தேர்வின் முடிவை பார்க்கலாம்.
முதல் நிலை தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் 1 முதல் 4ஆம் தேதி வரை முதன்மைத் தேர்வு நடைபெறும் என TNPSC அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.