‘உடனே சஸ்பெண்ட் தான்..!! ‘ முதல்வர் அதிரடி! வெளியான உத்தரவு!

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட சில நாட்களிலேயே, மதுக்கடைகள் மற்றும் பார்கள் தொடர்பாக ஒரு மிகக்கடுமையான உத்தரவை முதலமைச்சர் விஜய் பிறப்பித்துள்ளார். “இரவு 10 மணிக்குப் பிறகு கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்” என்பதுதான் அந்த ஒற்றை வரி உத்தரவு. ஆனால், இதனை நடைமுறைப்படுத்த காவல்துறைக்கு இப்போது பிறப்பிக்கப்பட்டுள்ள கிடுக்கிப்பிடி உத்தரவுதான் கோட்டை வட்டாரத்தையே அதிர வைத்துள்ளது.

தமிழகத்தில் மதுக்கடைகள் மற்றும் பார்கள் இரவு 10 மணிக்குள் மூடப்பட வேண்டும் என்பது பழைய விதிதான் என்றாலும், பல இடங்களில் 10 மணிக்குப் பிறகும் கள்ளத்தனமாக விற்பனை நடைபெறுவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, தமிழக காவல்துறை டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் இப்போது ஒரு அதிரடிப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். இனிமேல், அந்தந்தப் பகுதி இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்.ஐ-க்களே இதற்கு முழுப் பொறுப்பு.

மிக முக்கியமாக, இரவு 10:05 மணிக்கு ஒரு மதுக்கடையோ அல்லது பார்களோ திறந்திருப்பது கண்டறியப்பட்டால், அதற்குப் பொறுப்பான காவல் அதிகாரிகள் மீது உடனடியாகத் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒரு பகுதியில் விதியை மீறி மது விற்பனை நடந்தால், அந்தப் பகுதி இன்ஸ்பெக்டரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன.

காவல்துறையினர் இனி ஒவ்வொரு நாளும் இரவு 10 மணிக்குக் கடை மூடப்பட்ட பிறகு, அந்த இடத்தின் முன் நின்று தேதி, நேரம் மற்றும் இடத்தைக் குறிப்பிடும் வகையில் புகைப்படம் எடுத்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும். இரவு நேரங்களில் பார்கள் திறந்திருப்பதுதான் குடிபோதையில் வாகன விபத்துகள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவிற்கு முக்கியக் காரணமாக இருப்பதாக அரசு கருதுகிறது.

ஏற்கனவே முதற்கட்டமாகத் தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ள நிலையில், தற்போது நிலுவையில் உள்ள கடைகளிலும் இரும்புக்கரம் கொண்டு ஒழுங்கு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. விதிகளுக்குக் கட்டுப்படாமல் செயல்படும் மதுக்கடை உரிமையாளர்களுக்கும், அவர்களுக்குத் துணை போகும் அதிகாரிகளுக்கும் இனி இரக்கமே கிடையாது என்பதில் தவெக அரசு உறுதியாக இருக்கிறது. அரசின் இந்தத் துணிச்சலான நடவடிக்கை மதுப் பிரியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தினாலும், பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் இதனைப் பெரிதும் வரவேற்று வருகின்றனர்.

Related News

Latest News