நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் நாம் நம்முடைய செல்போன் வாயிலாகவே ரயில்வே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துவிட முடிகிறது. ஐஆர்சிடிசி செயலி அல்லது இணையதளத்திற்கு சென்றாலே போதும் ரயில் டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம்.
இந்திய ரயில்வே ஜூலை மாதத்தில் இருந்து ரயில்வே டிக்கெட் முன்பதிவுக்கான விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர இருக்கிறது. இந்நிலையில் தான் மத்திய ரயில்வே அமைச்சகம் தட்கல் டிக்கெட் முன்பதிவில் மூன்று முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. ஜூலை 1 ஆம் தேதி முதல் இவை அமலுக்கு வருகின்றன.
ஜூலை 1, 2025 முதல், IRCTC இணையதளம் அல்லது மொபைல் செயலி வழியாக தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயனர்கள் தங்களது IRCTC கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைத்து வைத்திருக்க வேண்டும். ஆதார் இணைப்பு இல்லாத கணக்குகளுக்கு தட்கல் டிக்கெட் முன்பதிவு அனுமதி இல்லை.
ஜூலை 15, 2025 முதல், தட்கல் டிக்கெட் முன்பதிவின்போது, பயனர்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP-யை உள்ளீடு செய்தால்தான் டிக்கெட் பதிவு செய்ய முடியும்.
தட்கல் முன்பதிவு தொடங்கும் முதல் 30 நிமிடங்களுக்கு (AC வகுப்பிற்கு காலை 10:00-10:30, ஸ்லீப்பர் வகுப்பிற்கு 11:00-11:30) முகவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது. இந்த நேரத்தில் சாதாரண பயனாளிகள் மட்டும் தங்களது IRCTC கணக்கில் இருந்து முன்பதிவு செய்யலாம்.
தட்கல் டிக்கெட் முன்பதிவின்போது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் அருகில் இருக்க வேண்டும், ஏனெனில் OTP வரும்போது உடனே உள்ளீடு செய்ய வேண்டும்.
முகவர்கள் மற்றும் ஏஜென்ட்களின் தவறான பயன்பாட்டை தடுக்கும் வகையில், சாதாரண பயனாளிகளுக்கு தட்கல் டிக்கெட் கிடைக்கும் வாய்ப்பை அதிகரிக்க இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன