அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுக்கு எதிரான வரிவிதிப்பு நடவடிக்கையை அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் நேரடி தாக்கம் இந்தியாவின் பொருளாதாரம், நாணய மதிப்பு, தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை ஆகியவற்றில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப். பதவியேற்றதிலிருந்து இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளை சீண்டி வருவது உலக அளவில் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் பல்வேறு நாடுகள் மீது பதிலுக்கு பதில் வரி விதிப்பை அறிமுகப்படுத்துவேன் என கூறி அதிர வைத்தார்.
சீனா, கனடா, மெக்ஸிகோ இந்தியா உள்ளிட்ட நாடுகள் 100% அளவுக்கு வரி விதிக்கும் நிலையில் அந்த நாடுகள் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கும் அதே அளவு வரி விதிக்கப்படும் எனக் கூறியிருக்கிறார். இந்த அறிவிப்புக்கு பின்னர், இந்தியாவில் தங்கத்தின் விலை திடீரென உயர்ந்தது. 10 கிராம் தங்கத்தின் விலை மட்டும் ரூ.1,600 வரை உயர்ந்துள்ளது. கடந்த மாதம் மட்டும் இந்தியாவின் தங்கத்தின் விலை சுமார் 2% அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் இந்திய அரசு எச்சரிக்கையாக செயல்பட்டு வருவதாகவும், அமெரிக்கா – இந்தியா இடையிலான வர்த்தகத் தீர்வு விரைவில் எட்டப்படும் என இந்திய பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். தற்போது தங்கம் ஏறக்குறைய 75 ஆயிரம் என்ற நிலையை எட்டி இருக்கும் நிலையில், விரைவில் 80 ஆயிரம் ரூபாயை தொடலாம் எனவும், சில மாதங்களிலேயே ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சம் என்ற நிலையை எட்டும் என்கின்றனர். தற்போதைக்கு பாதுகாப்பான முதலீடு தங்கம் தான் என்பதால் நடுத்தர மக்களின் கவனம் அதை நோக்கியே இருக்கிறது.