தங்கத்தின் மீதான மனிதனின் ஆசை, பல உயிர்களை எந்தவிதவுமான ஈவு இரக்கமுமின்றிக் காவு வாங்கும் ஒரு கொடூரமான செய்தியைத் தற்போது சூடான் நாடு உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது.
வடக்கு சூடானுக்கும் தெற்கு எகிப்துக்கும் இடையே உள்ள ‘ஹலைப் முக்கோணம்’ (Halaib Triangle) என்ற சர்ச்சைக்குரிய எல்லையில் அமைந்துள்ள ஒரு பாரம்பரிய தங்கச் சுரங்கத்தின் மீது, போர் விமானம் ஒன்று திடீர் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
சனிக்கிழமை காலை நடந்த இந்த அதிபயங்கரத் தாக்குதலில், சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த குறைந்தது 72 பேர் உடல் சிதறிப் பலியாகியுள்ளனர் என்ற பதைபதைக்கும் தகவலை மனித உரிமைக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
அடையாளம் தெரியாத அந்தப் போர் விமானம், அந்த மலைப்பகுதியை நோக்கி 5 முறை ஏவுகணைகளை வீசித் தாக்கியதாக நேரில் பார்த்தவர்கள் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளனர்.
ஏராளமானோர் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடி வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று மருத்துவக் குழுவினர் அஞ்சுகின்றனர்.
இந்தத் தாக்குதலை எகிப்து ராணுவம் தான் நடத்தியது என்று மனித உரிமைக் குழுக்கள் குற்றம் சாட்டியுள்ள போதிலும், எகிப்து தரப்பிலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வரவில்லை.
எகிப்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கருதப்படும் இந்தப் பகுதியில், சட்டவிரோதமாகத் தங்கம் வெட்டி எடுக்கப்படுவதை நிறுத்தச் சொல்லி எகிப்து பலமுறை எச்சரிக்கை விடுத்திருந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது.
கடந்த ஜூன் மாதம் இதே பகுதியில் நடந்த தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர். அப்போதும் எகிப்து அரசு பொறுப்பேற்காவிட்டாலும், சட்டவிரோத சுரங்கங்களுக்கு எதிராகத் தாங்கள் பெரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறியிருந்தது. சூடானைப் பொறுத்தவரை, தங்கம் என்பது ஒரு சாபமாகவே மாறியுள்ளது.
அங்கு உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ள துணை ராணுவப் படையினர் (RSF), ஆயுதங்கள் வாங்குவதற்காகவே டார்ஃபூர் போன்ற பகுதிகளில் இருந்து பல ஆயிரம் டன் தங்கத்தைக் கொள்ளையடித்து வெளிநாடுகளுக்குக் கடத்தி வருகின்றனர்.
ஐ.நா சபையின் 2024 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, சூடானில் வெட்டி எடுக்கப்படும் தங்கத்தில் 50 சதவீதத்திற்கும் மேலானவை சட்டவிரோதமாகவே கடத்தப்படுகின்றன.
அந்த கடத்தல் தங்கத்திற்காக அப்பாவிச் சுரங்கத் தொழிலாளர்களின் உயிர்கள் இப்படிப் போர் விமானங்களால் துள்ளத்துடிக்கப் பலிகொடுக்கப்படுவது உலக அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் என்ற ஒரு விலைமதிப்பற்ற உலோகத்திற்காக, மனித உயிர்கள் இவ்வளவு மலிவாகக் கொல்லப்படுவது ஒட்டுமொத்த மனித குலத்திற்கே விடப்பட்ட மாபெரும் சவாலாகும்.
