தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ஆம் தேதி, திங்கட்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இதற்கு முந்தைய நாட்களான அக்டோபர் 18 மற்றும் 19 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் என்பதால், பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை உறுதியாகியுள்ளது. வேலை நிமித்தமாக வெளியூர்களில் வசிப்போர், இந்த மூன்று நாட்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாட திட்டமிட்டிருப்பார்கள்.
பண்டிகை முடிந்த மறுநாளான அக்டோபர் 21, செவ்வாய்க்கிழமை வேலை நாளாக உள்ளது. சொந்த ஊரில் பண்டிகையை கொண்டாடிவிட்டு, பண்டிகை அன்றே உடனடியாக அடுத்த நாள் பணிக்கு திரும்புவது, வெளியூரில் வசிப்போருக்கு சிரமத்தை ஏற்படுத்தும். பயண களைப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் போன்ற காரணங்களால், பண்டிகைக்கு அடுத்த நாளையும் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
சமீப ஆண்டுகளாக, பொதுமக்களின் இந்த கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. இந்த நிலையில், இந்த ஆண்டும் அக்டோபர் 21, செவ்வாய்க்கிழமையை விடுமுறையாக அறிவித்து, தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறையை உறுதி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த கோரிக்கையை தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பண்டிகைக்கு இன்னும் 1 வாரம் மட்டுமே உள்ள நிலையில், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளி கல்வித்துறையின் ஆண்டு நாள்காட்டியின்படி, இந்த கல்வியாண்டில் மொத்தம் 210 வேலை நாட்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இருப்பினும், பண்டிகை காலங்கள் மற்றும் கனமழை போன்ற அசாதாரண சூழல்களில் கூடுதல் விடுமுறை அளிக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது.
அதே சமயம், செவ்வாய்க்கிழமை விடுமுறையாக அறிவிக்கப்பட்டால் அது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஒரு நீண்ட ஓய்வையும், பண்டிகையை முழுமையாக கொண்டாட முடியும். வரும் நாட்களில் தான் தெரியும் அரசு என்ன முடிவு எடுக்கும் என்று.
