தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு பருவமழை தெற்கு வங்கக்கடல், அந்தமான் கடல் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுப் பகுதிகளில் இந்த வார இறுதியில் தொடங்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், வடக்கு இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வருவதாகவும், இது அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் தாக்கத்தால் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், வரும் 14 மற்றும் 15ஆம் தேதிகளிலும் டெல்டா மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 16ஆம் தேதி வரை வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னை நகரில் இன்றும் நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸும் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related News

Latest News