தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.
செப்டம்பர் 3ஆம் தேதி திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும், செப்டம்பர் 4ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.
இதனிடையே, தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் காற்று வீச வாய்ப்புள்ளதால், குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
