நடப்பாண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. ஆனால் அவர் தனது உரையை நிகழ்த்தாமலேயே பேரவையில் இருந்து திடீரென வெளியேறினார். தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதால் வெளியேறியதாக விளக்கமளித்தார்.
இந்நிலையில் பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறியது தொடர்பாக அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து பேரவையில் அவர் பேசியதாவது : ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் ஆளுநர் உரை நிகழ்த்துவார் என்று சட்டம் உள்ளது. முந்தைய ஆண்டுகளைப் போல இம்முறையும் உரையை முழுமையாக படிக்காமல் ஆளுநர் சென்றுள்ளார். இந்த ஆண்டும் அதே காரணத்தை ஆளுநர் கூறி வெளியேறியுள்ளார். தேசிய கீதத்தின் மீதும், தேசிய ஒருமைப்பாட்டின் மீதும் தமிழ்நாடு மக்களும், அரசும் மாறாத பற்று கொண்டுள்ளது என்றார்.