டெங்கு வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தும்படி அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மழை காலங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் நிலையில், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. நல்ல நீரில் தான் கொசுக்கள் வளரும் என்பதால், வீட்டில், வெளியில் நீர்தொட்டிகள், பூந்தொட்டிகள், டயர்கள், பழைய குடுவைகள் போன்றவற்றில் தண்ணீர் தேங்க விடகூடாது என்றும் வாரம் ஒருமுறை அனைத்தையும் சுத்தம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒருவருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்றும் காய்ச்சல், சோர்வு, ரத்தப்போக்கு இருந்தால் தாமதிக்காமல் சிகிச்சை பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. டெங்கு காய்ச்சல் வந்த பிறகு நடவடிக்கை என்பதற்கு பதிலாக, டெங்கு வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தும்படி கேட்டுக்கொண்டுள்ளது.