இந்தியாவின் தொலைதூர மற்றும் கிராமப்புறப் பகுதிகளில், அதிவேக இணைய இணைப்பை வழங்கும் நோக்கில், எலான் மஸ்க் தலைமையிலான ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு, இந்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நடவடிக்கையின் ஒரு முக்கியப் பகுதியாக, வாடிக்கையாளர் சரிபார்ப்புக்காக, ஆதார் அடிப்படையிலான அங்கீகார முறையைப் பயன்படுத்த, ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) கைகோர்த்துள்ளது.
UIDAI வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, “ஸ்டார்லிங்க் நிறுவனம், வாடிக்கையாளர் சரிபார்ப்புக்காக ஆதார் அங்கீகாரத்தைப் பயன்படுத்தும். இது, முழு செயல்முறையையும் சீராகவும், பாதுகாப்பாகவும், மிகவும் எளிதாகவும் மாற்றும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்தியாவின் நம்பகமான டிஜிட்டல் அடையாளமான ஆதார், உலகளாவிய செயற்கைக்கோள் தொழில்நுட்பத்துடன் கைகோர்ப்பது, ஒரு சக்திவாய்ந்த ஒருங்கிணைப்பைக் குறிக்கிறது,” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம், UIDAI தலைமை நிர்வாக அதிகாரி புவனேஷ் குமார் மற்றும் ஸ்டார்லிங்க் இந்தியா இயக்குநர் பர்னில் உர்த்வரேஷ் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.
இந்த நிலையில், மத்திய தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் பெம்மாசானி சந்திர சேகர், ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், “ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்தியாவில் தற்போது 20 லட்சம் வாடிக்கையாளர்களை மட்டுமே வைத்திருக்க முடியும். மேலும், அவர்களால் 200 Mbps வேகத்தை மட்டுமே வழங்க முடியும். இது, நமது தற்போதைய தொலைத்தொடர்பு நிறுவனங்களைப் பாதிக்காது,” என்று தெரிவித்துள்ளார்.
BSNL போன்ற நிறுவனங்களுக்கு, ஸ்டார்லிங்கின் வருகையால் பெரிய அச்சுறுத்தல் இருக்காது என்ற கவலைகளைப் போக்கும் வகையில், அமைச்சரின் இந்தக் கருத்து அமைந்துள்ளது.
ஸ்டார்லிங்கின் வருகை, பாரம்பரிய பிராட்பேண்ட் சேவைகள் இல்லாத பகுதிகளில், இணைய இணைப்பில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.