தமிழக வாகன ஓட்டிகள் மற்றும் புதிதாக வாகனம் வாங்குபவர்களுக்கு இன்று ஒரு மிக முக்கியமான நாளாக விடிந்திருக்கிறது.
ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் எனப்படும் ஆர்.சி புத்தகத்தைப் பெறுவதில் பல ஆண்டுகளாக இருந்து வந்த நடைமுறையைத் தமிழக அரசு இப்போது , அதாவது செப்டம்பர் 12-ம் தேதி முதல் அதிரடியாக மாற்றியமைத்துள்ளது.
இனி உங்கள் வீட்டு முகவரிக்குத் தபால் மூலம் ஸ்மார்ட் கார்டு வரும் வரை நீங்கள் வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ள தமிழக அரசு, இந்தச் சேவைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கியுள்ளது.
தற்போதைய நடைமுறைப்படி, ஓட்டுநர் உரிமம் பெற விரும்புவோர் அல்லது புதிய வாகனத்தைப் பதிவு செய்பவர்கள், அதற்கான கட்டணத்தைச் செலுத்தி, சுமார் 15 முதல் 30 நாட்கள் வரை தபாலுக்காகக் காத்திருப்பார்கள். இதற்காக 250 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்பட்டு வந்தது.
ஆனால், இப்போது முதல் புதிய வாகனம் வாங்குபவர்கள் அதன் பதிவுப் பணிகள் முடிந்த அடுத்த சில நிமிடங்களிலேயே, டிஜிட்டல் ஆர்.சி-யை இணையம் வழியாகத் தாங்களாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதேபோல், ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்குத் தேர்வு முடிந்த அன்றே டிஜிட்டல் முறையில் உரிமம் வழங்கப்பட்டுவிடும்.
உங்கள் ஓட்டுநர் உரிமம் அங்கீகரிக்கப்பட்டவுடன், நீங்கள் பதிவு செய்த செல்போன் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வரும். அதன் பிறகு மத்திய அரசின் ‘பரிவாஹான்’ இணையதளம் அல்லது ‘எம்-பரிவாஹான்’ செயலி மூலம் ஓடிபி (OTP) பயன்படுத்தி உங்கள் டிஜிட்டல் ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த டிஜிட்டல் ஆவணங்களில் ஒரு க்யூ ஆர் (QR) கோடு இடம்பெற்றிருக்கும்.
போக்குவரத்து அதிகாரிகள் உங்களைச் சோதனையிடும்போது, அந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்வதன் மூலம் ஆவணத்தின் உண்மைத்தன்மையை மின்னணு முறையில் எளிதாகச் சரிபார்க்க முடியும். இது போலி ஆவணங்களைத் தடுக்க உதவுவதோடு, அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான நேரத்தையும் மிச்சப்படுத்தும்.
இந்த டிஜிட்டல் ஆவணங்களை ஒரு ஆண்டு வரை நீங்கள் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இதனால் அசல் லைசென்ஸ் அல்லது ஆர்.சி கார்டு தொலைந்து விடுமோ அல்லது சேதமடைந்து விடுமோ என்ற கவலை இனி யாருக்கும் தேவையில்லை.
உங்கள் செல்போனிலேயே பாதுகாப்பாக வைத்துக்கொண்டு தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்தலாம். இது அரசு அலுவலகங்களுக்கு மக்கள் அலையும் சிரமத்தைக் குறைக்கும் ஒரு சூப்பர் வசதியாகப் பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் இந்த டிஜிட்டல் புரட்சி, வாகனப் போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
