வாயோடு வாய் வைத்து தனது மூச்சுக்காற்றை செல்லப் பிராணிக்கு செலுத்திக் காப்பாற்றியவரின் செயல் சமூக ஊடகத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது.
கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வருபவர் ஸ்டோன். குத்துச்சண்டை வீராங்கனையான இவர் அருகிலுள்ள பூங்காவுக்கு தனது 9 வயது செல்லப் பிராணியை அழைத்துக்கொண்டு நடைப்பயிற்சிக்காகச் சென்றார்.
ஆனால், பூங்காவுக்குள் நுழையும்முன் செல்லப் பிராணி எதிர்பாராத விதமாக நடைபாதையில் மயங்கிச் சரிந்தது. அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஸ்டோன் அழுதபடியே, யாராவது உதவிக்கு வாருங்களேன் என்று அழைத்தார்.
அப்போது அதிர்ஷ்டவசமாக அங்கு ஒருவர் வந்தார். அவர் செல்லப் பிராணியின் இதயம் துடிக்கிறதா என்பதைப் பரிசோதித்தார். இதயத்துடிப்பு நின்றுவிட்டதை உணர்ந்த அவர், செல்லப்பிராணியின் மார்பை அழுத்தி அழுத்தி இதயத்தை இயங்க வைக்க முயன்றார்.
அந்த முயற்சி பலன் தராத நிலையில், சற்றும் தாமதிக்காமல் தனது வாயால் செல்லப் பிராணிக்கு செயற்கை சுவாசம் ஊட்டத் தொடங்கினார். அதற்கு நல்ல பலன் கிடைக்கத் தொடங்கியது.
சில விநாடிகளில் செல்லப் பிராணியின் இதயம் துடிக்கத் தொடங்கி கைகால்களை அசைக்கத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து துள்ளிக்குதித்து எழுந்தது.
பின்னர், கால்நடை மருத்துவரிடம் செல்லப் பிராணியை அழைத்துக்கொண்டு சென்று பரிசோதித்தபோது சோர்வு காரணமாக மயங்கிச் சரிந்தது தெரியவந்தது.
தக்க சமயத்தில் சமயோசிதமாக செயல்பட்டு செல்லப்பிராணியின் உயிரைக் காப்பாற்றிய அந்த மாமனிதருக்குத் தற்போது இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.