தங்கம் விலை வரலாற்று உயர்வு! நகைப் பிரியர்களுக்கு பேரிடி!

இந்தியப் பொருளாதார வரலாற்றிலேயே தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இதுவரை இல்லாத ஒரு மிகப்பெரிய அதிரடி மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இன்று காலை இந்திய நகை வர்த்தகச் சந்தையில் ஒரு நிலநடுக்கமே ஏற்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி மீதான ஒட்டுமொத்த இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிரடியாக உயர்த்தியிருக்கிறது.

இந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில நிமிடங்களிலேயே, எம்.சி.எக்ஸ் (MCX) சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் 6 சதவீத ‘அப்பர் சர்க்யூட்’டைத் (Upper Circuit) தொட்டு வர்த்தகத்தை முடக்கின. 10 கிராம் தங்கம் விலை சுமார் 9,200 ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 648 ரூபாய் என்ற புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது.

அதேபோல், வெள்ளி விலை கிலோவிற்கு 16,743 ரூபாய் உயர்ந்து, 2 லட்சத்து 95 ஆயிரத்து 805 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஏன் இந்தத் திடீர் வரி உயர்வு? இதற்குப் பின்னால் ஒரு மிக முக்கியமான சர்வதேச அரசியல் சூழல் இருக்கிறது. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே முற்றியுள்ள போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் நீரிணையில் நிலவும் நெருக்கடி காரணமாக, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.

இதனைச் சரிசெய்யவும், தங்கம் இறக்குமதியைக் குறைக்கவும் மத்திய அரசு அடிப்படைச் சுங்க வரியை 10 சதவீதமாகவும், கூடுதல் செஸ் வரியை 5 சதவீதமாகவும் உயர்த்தி, மொத்தம் 15 சதவீத வரியை விதித்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஓரளவுக்குச் சரிந்து வந்தாலும், இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள இந்த 15 சதவீத வரி காரணமாக, உள்நாட்டு சந்தையில் தங்கம் விலை சாமானிய மக்களுக்கு எட்டாத உயரத்தில் நிற்கிறது.

சந்தை நிபுணர் அனுஜ் குப்தாவின் கணிப்புப்படி, வரும் நாட்களில் தங்கம் விலை ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வரையிலும், வெள்ளி விலை 3 லட்சம் ரூபாய் வரையிலும் உயர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய ஆட்சி அமைந்துள்ள இந்தச் சூழலில், மத்திய அரசின் இந்த வரி உயர்வு மற்றும் விலை ஏற்றம் பொதுமக்களிடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

குறிப்பாக, தமிழகத்தில் முதலீட்டு ரீதியாகத் தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கை 186 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், இந்த விலை உயர்வு நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒரு பேரிடியாகவே பார்க்கப்படுகிறது.

Related News

Latest News