மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் பெற்றோர்களும் சமூகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பள்ளியின் கழிவறையில் ரத்தக்கறை கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, 5 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளிடம் “யாருக்கு மாதவிடாய் வந்துள்ளது?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.
பின்னர், மாணவிகள் ஒவ்வொருவரும் கழிவறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, உள் ஆடைகளை கழற்றி, மாதவிடாய் ஏற்பட்டுள்ளதா என்று சோதனை செய்யப்பட்டது. இந்த செயல்பாட்டில் பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் பெண் உதவியாளர் நேரடியாக ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து மாணவர்கள் தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து பள்ளிக்கு சென்ற பெற்றோர்கள் போராட்டம் நடத்தி, போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் பெண் உதவியாளர் என இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.