பூ பூக்காததால், தோட்டக்காரர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
அதிரடி செயல்களுக்குப் பெயர்போனவர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்.
அவரது தந்தை கிம் ஜாங் இல். சர்வாதிகாரியான இவர் 2011 ஆம் ஆண்டு, தனது 69 ஆவது வயதில் மரணமடைந்தார். இறப்புக்குப் பிறகு, அவர் பிறந்த தினமான பிப்ரவரி 16 ஆம் தேதி, ஒவ்வொரு வருடமும் ஒளிரும் நட்சத்திரத்தின் நாள் என்ற பெயரில் அங்கு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினம் வட கொரிய நாட்டின் முக்கியமான விடுமுறை தினங்களுள் ஒன்றாகும்.
இந்த தினத்தில் வடகொரிய நகரத் தெருக்கள் அனைத்தும் கிம்ஜோங்கிலியா என்னும் பூக்களால் அலங்கரிக்கப்படும். கிம்ஜோங்கிலியா என்பது கிம் ஜாங் இல்லின் நினைவாகப் பெயரிடப்பட்ட ஒருவகைக் கலப்பினப் பூவாகும். சிவப்பு நிறமுடைய இந்தப் பூக்கள் வடகொரியா முழுவதும் தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு, கிம் ஜாங் இல்லின் பிறந்த நாள் நெருங்கிவிட்ட நிலையில், கிம்ஜோங்கிலியா பூக்கள் பூக்கவில்லை. சரியான வெப்பநிலை, போதிய ஈரப்பதம் இல்லாததால், அவை பூக்கவில்லை.
இந்த நிலையில், அவையிரண்டும் கிடைப்பதற்காகத் தோட்டக்காரர்கள் முயன்றனர். என்றாலும், பூக்கள் எப்போது பூக்கும் என்று சொல்லமுடியவில்லை. இதனால், அதிபர் கிம் ஜாங் உன் சில தொழிலாளர்களுக்கு 6 மாதத் தண்டனை விதித்தார்.
அதைத் தொடர்ந்து அவர்கள், தொழிலாளர்கள் முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.
கிம் ஜாங் இல் இறந்து 10 ஆண்டுகள் ஆன நிலையில், சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில் 11 நாட்களைத் துக்க தினமாகக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த நாட்களில் சிரிக்கவோ மது அருந்தவோ தடைவிதிக்கப்பட்டது.
அவரது இறப்பை நினைவுகூரும் நாளில் மகிழ்ச்சியின் அறிகுறிகளை வெளிக்காட்ட வேண்டாம் என்றும் உத்தரவிட்டிருந்தனர்.