PF முதல் ரயில் டிக்கெட் வரை: ஆகஸ்ட் 1 முதல் அமுலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்..

2026ஆம் ஆண்டு ஜூலை மாதம் நிறைவடைந்து ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ள நிலையில், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் செலவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் பல புதிய மாற்றங்கள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகின்றன.

ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் வழக்கம்போல் எல்பிஜி சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்க உள்ளன. சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் அந்நியச் செலாவணி நிலவரத்தைப் பொறுத்து விலை உயரவோ அல்லது குறையவோ வாய்ப்புள்ளது. ஈரான்–அமெரிக்கா பதற்றம் குறைந்துள்ளதால் சிலிண்டர் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

ரயில்வே தட்கல் டிக்கெட் முன்பதிவிலும் முக்கிய மாற்றம் அமலாகிறது. ரயில் நிலைய முன்பதிவு கவுன்டர்களில் ஆகஸ்ட் 1 முதல் டோக்கன் முறையில் மட்டுமே தட்கல் டிக்கெட்டுகள் வழங்கப்படும். இதனால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் சிரமம் குறையும்.

ஈபிஎஃப்ஓ 3.0 திட்டத்தின் கீழ், பிஎஃப் கணக்கிலுள்ள பணத்தை யுபிஐ மற்றும் ஏடிஎம் வழியாக எடுக்கும் வசதி விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பணம் எடுக்கும் நடைமுறையை மேலும் எளிதாக்கும்.

ஸ்பீடு போஸ்ட் சேவைக்கான புதிய கட்டணங்கள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகின்றன. பார்சல் மற்றும் ஆவணங்களுக்கான கட்டணங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், தபால் சேவையை பயன்படுத்துவோர் புதிய விதிமுறைகளை கவனிக்க வேண்டும்.

வருமான வரி தாக்கல் செய்யாதவர்கள் ஆகஸ்ட் 1 முதல் தாமதமான (Belated ITR) தாக்கலை அபராதத்துடன் செய்யலாம். மேலும், மேம்படுத்தப்பட்ட CKYC 2.0 முறை அறிமுகமாகுவதால், வங்கி, காப்பீடு மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட நிதி நிறுவனங்களில் ஒரே முறை கேஒய்சி செய்தால் போதுமானதாக இருக்கும்.

Related News

Latest News