தமிழகத்தின் நிதிநிலை மற்றும் தொழில் வளர்ச்சி தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் தொடர்ந்து முக்கிய ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மாநில அரசின் தற்போதைய நிதிநிலை, நிதித்துறையின் செயல்பாடுகள் மற்றும் வரவிருக்கும் பட்ஜெட் தயாரிப்பு குறித்து விரிவான ஆய்வு செய்யப்பட்டது. அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி, அவற்றின் செலவீன நிலை, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தேவையான நிதி ஒதுக்கீடுகள் போன்ற அம்சங்கள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். மேலும், தவெக வழங்கியுள்ள நிதியுதவி மற்றும் அதன் பயன்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது. மாநில வளர்ச்சித் திட்டங்கள் தடையின்றி செயல்பட வேண்டுமென அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து இன்று தலைமைச் செயலகத்தில் தமிழகத்தில் செயல்பட்டு வரும் முக்கிய தொழில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் BMW, TVS, Hudson உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேலும் விரிவுபடுத்துவது, புதிய முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முதலீட்டு திட்டங்களின் முன்னேற்ற நிலை, புதிய தொழிற்திட்டங்கள் அமைக்கும் வாய்ப்புகள் மற்றும் தொழில் துறைக்கு தேவையான அரசு ஆதரவுகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மாநிலத்தை தொழில் மற்றும் முதலீட்டுத் துறையில் முன்னணி மாநிலமாக மாற்ற அரசு உறுதியாக செயல்படும் என முதலமைச்சர் விஜய் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
