‘மெட்ரோ முதல் பஸ் வரை’ – மொத்தமாக மாறப்போகும் ‘சென்னை’!

சென்னையின் முக்கியப் போக்குவரத்து நரம்புகளாக விளங்கும் பழைய மகாபலிபுரம் சாலை (OMR) மற்றும் பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலை ஆகிய இரண்டும் சர்வதேசத் தரத்திலான ‘மாடல் போக்குவரத்து வழித்தடங்களாக’ (Model Mobility Corridors) மாறப் போகின்றன.

சுமார் 32.4 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த இரண்டு சாலைகளையும் நவீனமயமாக்கச் சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் (CUMTA) ஒரு பிரம்மாண்டமான மறுசீரமைப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், மத்திய கைலாஷ் முதல் கேளம்பாக்கம் வரையிலான 25 கி.மீ OMR சாலையும், பல்லாவரம் முதல் துரைப்பாக்கம் வரையிலான 7.4 கி.மீ ரேடியல் சாலையும் முற்றிலுமாக மாற்றி அமைக்கப்பட உள்ளன. இதன் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் சேவைகளை ஒரே இடத்தில் ஒருங்கிணைப்பதுதான்.

மெட்ரோ நிலையங்களிலிருந்து இறங்கும் பயணிகள், எவ்வித சிரமமும் இன்றி பேருந்துகள், சைக்கிள்கள் அல்லது நடந்தே செல்வதற்கான வசதிகள் மிகச் சிறப்பாக உருவாக்கப்பட உள்ளன. குறிப்பாக, பாதுகாப்பான நடைபாதைகள், ஸ்கைவாக் (Skywalk) பாலங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வசதிகள் இந்தத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

பொதுப் போக்குவரத்து முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதற்காக, OMR மற்றும் ரேடியல் சாலைகளில் பேருந்துகளுக்கெனத் தனி வழித்தடங்கள் (Exclusive Bus Lanes) அமைக்கப்பட உள்ளன.

பல்லாவரம்-துரைப்பாக்கம் சாலையில் ‘BRTS’ எனப்படும் அதிவேகப் பேருந்து போக்குவரத்துத் திட்டத்தைச் செயல்படுத்தப் போதிய இடவசதி இருப்பதால், அதனை ஒரு முன்மாதிரி சாலையாக மாற்ற முதலமைச்சர் விஜய் ஆர்வம் காட்டி வருகிறார். இந்தத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் தயாராகிவிடும் என்றும், மெட்ரோ பணிகள் முடியும் அதே நேரத்தில் இந்தச் சாலைப் பணிகளும் நிறைவடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெறும் சாலை விரிவாக்கத்தோடு மட்டும் நில்லாமல், மின்சாரம், குடிநீர், இணையம் மற்றும் எரிவாயு குழாய்கள் செல்வதற்குத் தரையடியில் தனித்தனி உள்கட்டமைப்புகள் (Underground Utility Infrastructure) உருவாக்கப்பட உள்ளன. இதனால் அடிக்கடி சாலைகளைத் தோண்டும் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.

மேலும், பசுமையான மீடியன்கள், நவீன தெரு விளக்குகள், மழைநீர் வடிகால்கள் என இந்தச் சாலைகள் சென்னையின் ஒரு புதிய அடையாளமாக மாறும். 2027-ஆம் ஆண்டிற்குள் இந்த இரண்டு சாலைகளும் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்து, சென்னை மக்களின் பயண நேரத்தைக் குறைப்பதோடு, பாதுகாப்பான பயணத்தையும் உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News