உலக அரசியல் மேடையில் இன்று இந்தியாவின் பங்கு மிகப்பெரிய கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக G20 மாநாடு மற்றும் BRICS உச்சி மாநாடுகளில் இந்தியா வகிக்கும் நிலை, உலகத்தையே இந்தியாவை நோக்கி திரும்ப வைக்கிறது.
2023-ஆம் ஆண்டு இந்தியா G20 உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது. உலகின் முன்னணி 20 பொருளாதார நாடுகளை ஒன்றிணைத்து, “ஒரே பூமி – ஒரே குடும்பம் – ஒரே எதிர்காலம்” என்ற தாரகமந்திரத்தால் உலக ஒற்றுமைக்கான செய்தியை இந்தியா வலியுறுத்தியது. சுற்றுச்சூழல், டிஜிட்டல் பொருளாதாரம், வறுமை ஒழிப்பு என பல்வேறு முக்கிய துறைகளில் இந்தியா தீர்வுகளை முன்வைத்து தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியது.
அதேபோல், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகியவை அடங்கிய BRICS கூட்டணியில் இந்தியா வளர்ந்து வரும் சந்தைகளின் குரலாக செயல்படுகிறது. புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்ட நிலையில், இந்த கூட்டணியின் தாக்கம் அதிகரிக்கிறது. அந்த தருணத்தில் இந்தியாவின் வலிமையான நிலைப்பாடு, உலக தெற்கு நாடுகளுக்கான வழிகாட்டியாக பார்க்கப்படுகிறது.
இன்று இந்திய அரசியலை வெறும் உள்நாட்டு விவகாரமாக அல்லாமல், உலக அரசியலின் ஒரு மைய புள்ளியாக பார்ப்பது குறிப்பிடத்தக்க மாற்றமே. மட்டுமல்லாமல் இந்தியாவின் டிஜிட்டல் பரிமாற்ற அனுபவம் அதாவது UPI, டிஜிட்டல் ரூபாய், உலக நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும்.
2025, G20 உச்சிமாநாட்டில் இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும். பசுமை ஆற்றல், சூரிய ஆற்றல், புதுப்பிக்கத்தக்க சக்தி போன்ற துறைகளில் இந்தியா முன்னணி பங்கு வகிக்கும். வளர்ந்து வரும் நாடுகளின் தேவைகள், சவால்கள், வாய்ப்புகள் ஆகியவற்றை உலக மேடையில் வலியுறுத்தும்.
சர்வதேச மோதல்கள், பொருளாதார சிக்கல்கள் போன்றவற்றுக்கு நடுநிலையான, சமாதான தீர்வுகளை முன்வைக்கும். மேலும் 2023ல் வெற்றிகரமாக நடத்திய அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்தியா உலகின் கவனத்தை மீண்டும் தன் பக்கம் திருப்பும் என்பதில் சந்தேகமில்லை.