Thursday, July 17, 2025

”அவர்கிட்ட இருந்து கத்துக்கங்க” : பும்ராவை விளாசிய முன்னாள் வீரர்

லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோற்றதால், எக்கச்சக்க விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்திய வீரர்களுக்கு பலதரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. அந்தவகையில் இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான், பும்ராவின் பந்துவீச்சை காட்டமாக விமர்சித்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர், ” இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸை பாருங்கள். அணியின் வெற்றிதான் அவருக்கு முக்கியமாக தெரிந்தது. இதனால், கடின உழைப்பை போட்டு தொடர்ச்சியாக 10 ஓவர்களை வீசுகிறார். ஆனால், பும்ரா தொடர்ச்சியாக 5 ஓவர்களை வீசிவிட்டு, ஓய்வுக்கு சென்றுவிடுகிறார். அணியின் வெற்றிக்காக போராட வேண்டும் என நினைத்திருந்தால், இவராலும் தொடர்ச்சியாக 10 ஓவர்களை வீசியிருக்க முடியும்.

ஏற்கனவே, 2 போட்டிகளில் அவருக்கு முழு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. பும்ராவால் 5 ஓவர்களைதான் வீச முடியும் என்றால், தாராளமாக அவரை 5 போட்டிகளிலும் விளையாட வைக்க முடியும். பும்ரா ஓய்வில் மட்டுமே கண்ணாக இருக்கிறார். விளையாடும் மூன்று போட்டிகளில், தொடர்ச்சியாக ஓவர்களை வீசி, பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். கேப்டன் சுப்மன் கில், பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோர் இதுகுறித்து பும்ராவிடம் பேச வேண்டும்.

ஒருவேளை, தொடர்ச்சியாக 5 ஓவர்களை மட்டும்தான் வீச முடியும் என்றால், அவர் தேவையே கிடையாது. அவர் இல்லாமல்தான், 2ஆவது டெஸ்டில் வென்றோம்,” இவ்வாறு ஓபனாக பேசியிருக்கிறார். இர்பான் பதானின் ஆதங்கத்திலும் உண்மை உள்ளது. ஏனெனில் பும்ரா 5 ஓவர்களையும் இடைவெளி இல்லாமல் வீசுவதால், அவரின் ஓவர்களை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் நிதானமாக கையாண்டு விட்டு, பிற பவுலர்களை அட்டாக் செய்கின்றனர்.

இது இந்தியாவுக்கு பின்னடைவாக தான் பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் பும்ரா இருந்தும் டெஸ்ட் போட்டிகளை இந்தியா தொடர்ச்சியாக தோற்பதால், ரசிகர்களுக்கும் அவர்மீதான ஆர்வம் குறைந்து விட்டது. எனவே 4வது டெஸ்டில் அவர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒன்று தான் என்ற மனநிலைக்கு ரசிகர்கள் வந்துவிட்டனர்.

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டி ஜூலை 23ம் தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது. இந்த போட்டியை தோற்றால் இந்தியா 3-1 என்ற கணக்கில், டெஸ்ட் தொடரினை இழந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news