அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஈரான் கொள்கையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள் குறித்து வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (Wall Street Journal) வெளியிட்டுள்ள புதிய அறிக்கை உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஈரானின் அணு ஆயுதக் கனவை ஒழிக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு போர் தொடங்கிய டிரம்ப், இப்போது தனது நிலைப்பாட்டைச் சற்றே தளர்த்திக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
ஈரானுடன் ஒரு முறையான புதிய அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டாலும் கூட, உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) ஈரான் முழுமையாகத் திறந்துவிட்டால், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் தயாராகி வருவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான இந்த ஐந்து மாத கால மோதலில், ஹார்முஸ் ஜலசந்தி தான் ஈரானின் மிகப்பெரிய பலமாக உருவெடுத்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடங்கியதில் இருந்து, இந்த வழித்தடத்தை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் வணிகக் கப்பல்களின் போக்குவரத்தை முடக்கியுள்ள ஈரான், அமெரிக்கப் போர்க்கப்பல்கள் இந்த வழியாகச் செல்லக் கூடாது என்றும் பிடிவாதம் காட்டி வருகிறது.
இதன் விளைவாகச் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, அமெரிக்காவில் பெட்ரோல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இது டிரம்பிற்கு உள்நாட்டில் மிகப்பெரிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அதிபர் டிரம்ப் தனது நெருக்கமான அதிகாரிகளிடம் பேசுகையில், ஒரு புதிய அணுசக்தி ஒப்பந்தம் இல்லாமலேயே தான் ஈரானை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
“அணு ஆயுதம் வேண்டாம்” என்ற கோரிக்கையை விட, “கடல் வழித்தடத்தைத் திற” என்ற கோரிக்கைக்கே இப்போது முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆனால், இந்த வழித்தடத்தைத் திறப்பதற்கு ஈரான் ஒரு நீண்ட நிபந்தனைப் பட்டியலை முன்வைத்துள்ளது.
பல பில்லியன் டாலர் இழப்பீடு, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவது, வளைகுடா பிராந்தியத்திலிருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்றுவது மற்றும் முடக்கப்பட்ட ஈரானியச் சொத்துக்களை விடுவிப்பது என ஈரானின் கோரிக்கைகள் அமெரிக்காவைத் திணறடித்து வருகின்றன.
அமெரிக்காவில் இன்னும் மூன்று மாதங்களுக்குள் இடைக்காலத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களைக் கவர வேண்டிய கட்டாயம் டிரம்பிற்கு உள்ளது. பெட்ரோல் விலை உயர்வு தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், ஏதேனும் ஒரு ஒப்பந்தத்தின் மூலம் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்து விலையைக் குறைக்க அவர் துடிக்கிறார்.
இருப்பினும், ஈரானின் நிபந்தனைகளை அமெரிக்கா முழுமையாக ஏற்குமா அல்லது ஹார்முஸ் ஜலசந்தியைத் தனது கட்டுப்பாட்டில் வைக்க ஈரான் தொடர்ந்து போராடுமா என்பதே இப்போதைய கேள்வி. அணு ஆயுத விவகாரத்தைக் கைவிட்டு, பொருளாதார நலனுக்காக டிரம்ப் இறங்கி வருவது, ஈரானின் ராஜதந்திரத்திற்குத் கிடைத்த வெற்றியாகவே அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.
