தமிழகத்தில் இன்று முதல் வரும் 26-ந்தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதால் மழை பெய்யக்கூடும்.
இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யலாம். புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.
21-ந்தேதி சில இடங்களில் லேசான மழையும், 22 மற்றும் 23-ந்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். 24 மற்றும் 25-ந்தேதிகளில் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
மேலும், 20 முதல் 24-ந்தேதி வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் மணிக்கு 45-55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
