பறக்கும் தோசை

329
Advertisement

பறக்கும் தோசையின் வீடியோ அனைவரையும் கவர்ந்திழுத்து வருகிறது.

உலகம் முழுவதும் தோசைப் பிரியர்கள் உள்ளனர். தமிழர்களின்
பாரம்பரிய உணவுகளுள் ஒன்றான தோசையின் சுவையில் மனம்
லயிக்காதவர்களே இல்லையெனலாம்.

அனைத்துத் தரப்பினருக்கும் அனைத்து வயதினருக்கும் அனைத்துக்
காலங்களிலும் விருப்பமான உணவு ஒன்றைக் கூறவேண்டுமானால்,
சட்டென்று தோசை என்று சொல்லிவிடலாம்.

அந்த தோசைகளை சுடும் விதமும் எளிதானதுதான். அதனை
ஒவ்வொருவரும் லாவகமாக சுடும்போது அநேகம்பேரின்
கவனத்தை ஈர்த்துவிடுகிறது. தோசை சுடுவதற்கு தற்போது
எந்திரங்கள் வந்துவிட்டன என்றாலும், சமையல் கலைஞர்கள்
கையால் சுட்டுத் தரும் தோசையே அலாதியான சுவை நிறைந்தது.

அந்த வகையில் சாலையோர உணவகம் ஒன்றில் ஒருவர் தோசையை
சுட்டு சுட்டு இடது கையால் தூக்கி வீச, பரிமாறுபவர் அதனைக்
கச்சிதமாகப் பிடித்து தட்டில் வைத்துப் பரிமாறத் தயாராகிறார்.
அந்த வீடியோ பறக்கும் தோசை என்ற பெயரில் தற்போது வலைத்
தளங்களில் வைரலாகி வருகிறது.

அரிசியையும் உளுந்தையும் தனித்தனியே ஊறவைத்து அரைத்த பின்
ஒன்றாகக் கலந்து சில மணி நேரம் இரவில் ஊறவைத்தபின் சுடப்படும்
தோசையே தனிச்சுவை மிக்கதுதான். என்றாலும், சாதா தோசை,
ஸ்பெஷல் தோசை, கல் தோசை, பேப்பர் ரோஸ்ட், மசால் தோசை, ரவா
தோசை, நெய் தோசை, வெங்காய தோசை, பொடி தோசை, முட்டை
தோசை, கறி தோசை என்று விதம்விதமான தோசைகளை சாப்பிடுவதில்
மனம் அளவற்ற ஆனந்தம் கொள்ளும்.

இன்னும்பல தோசைகளும் உண்டு. சோளத் தோசை, கோதுமைத் தோசை,
கேப்பைத் தோசை, மைதா தோசை என்று பட்டியல் நீண்டுகொண்டே
போகும். தோசை என்று சொல்லும்போதே நாவில் உமிழ் நீர் ஊறிவிடும்.
அதிலும் தோசை சுடும்போது வெளியாகும் மணமும் சிந்தனையை
தோசையிலேயே நிலைகொள்ளச் செய்துவிடும்.