ஆட்டத்தை தொடங்கும் Flipkart… Swiggy, Zomato-க்கு புதிய போட்டி!!

இந்தியாவின் உணவு விநியோகத் துறையில் போட்டி மீண்டும் தீவிரமடைந்துள்ளது. வால்மார்ட்டுக்குச் சொந்தமான ஃபிளிப்கார்ட், ஆகஸ்ட் 15 முதல் பெங்களூருவில் தனது உணவு விநியோகச் சேவையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக நகரம் முழுவதும் உள்ள உணவகங்களுடன் கூட்டாண்மை ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

உணவகங்களை ஈர்க்கும் நோக்கில், தற்போது Zomato மற்றும் Swiggy போன்ற நிறுவனங்கள் வசூலிக்கும் 16 முதல் 30 சதவீத கமிஷனை விட குறைவாக, சுமார் 10 சதவீத கமிஷன் மட்டுமே வசூலிக்க ஃபிளிப்கார்ட் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த சேவை அரசின் திறந்த டிஜிட்டல் வர்த்தக வலையமைப்பான ONDC தளத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட உள்ளது. முதலில் பெங்களூருவில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, நாடு முழுவதும் விரிவுபடுத்தும் திட்டமும் உள்ளது.

மறுபுறம், ராபிடோவின் Ownly சேவை பெங்களூருவில் வேகமாக வளர்ந்து, 25,000-க்கும் மேற்பட்ட உணவகங்கள் மூலம் நாள்தோறும் 40,000-க்கும் அதிகமான ஆர்டர்களைப் பெற்று வருகிறது. இதன் மூலம் அந்நகரின் உணவு விநியோகச் சந்தையில் 7 முதல் 10 சதவீத பங்கைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், குறைந்த கமிஷன், ONDC ஆதரவு மற்றும் உணவகங்களுக்கு சாதகமான வணிக முறை ஆகியவற்றின் மூலம் ஃபிளிப்கார்ட் சந்தையில் புதிய போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியாவின் உணவு விநியோகத் துறையில் போட்டி மேலும் சூடுபிடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

Related News

Latest News