ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 30 பேர் நேற்று முன் தினம் இரவு தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தங்கள் நாட்டு எல்லைக்குள் மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை வரும் 23ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மீனவர்கள் 30 பேரும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
