இனி காவல் நிலையத்தில் புகார் கொடுப்பது ஈஸி… அதிரடி மாற்றம்!!

இந்தியாவிலேயே முதல் செயற்கை நுண்ணறிவு (AI) காவல் நிலையம் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் காவல்துறையின் அன்றாடப் பணிகளில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பொதுமக்களுக்கான சேவைகளை விரைவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் இந்தப் புதிய முயற்சி செயல்படுத்தப்பட உள்ளது. இங்கு காவலர்கள் வழக்கம்போல் பணியாற்றுவார்கள். ஆனால், புகார் பதிவு, ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ஏஐ தொழில்நுட்பம் உதவியாக இருக்கும்.

குறிப்பாக, பொதுமக்கள் தங்களுக்குத் தெரிந்த மொழியிலேயே புகார் அளிக்கலாம். அந்தப் புகாரை ஏஐ தொழில்நுட்பம் மொழிபெயர்த்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

மேலும், காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள், குற்றப் பின்னணித் தகவல்கள் மற்றும் போக்குவரத்து விவரங்கள் டிஜிட்டல் முறையில் சேமிக்கப்படும்.

இந்தத் தரவுகளின் உதவியுடன் முதல் தகவல் அறிக்கை (FIR), வழக்கு நாட்குறிப்புகள், விசாரணை அறிக்கைகள் உள்ளிட்ட ஆவணங்களைத் தயாரிக்கவும் ஏஐ பயன்படுத்தப்படும்.

இதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹைதராபாத் காவல் ஆணையர் வி.சி. சஜனார் நேரில் ஆய்வு செய்துள்ளார். காவல்துறை அதிகாரிகளுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த முயற்சி வெற்றியடைந்தால், எதிர்காலத்தில் இந்தியாவின் பிற காவல் நிலையங்களிலும் ஏஐ தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

Related News

Latest News