குளிர்காலம் தொடங்கும் போது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி சற்று குறைவது பொதுவான ஒன்று. கோடைக்காலத்தை விட குளிர்காலத்தில் சளி, இருமல், காய்ச்சல், செரிமான கோளாறுகள், மலச்சிக்கல், எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் அதிகமாக காணப்படுகின்றன.
இந்த காலகட்டத்தில் பால் தேநீர், காபி போன்றவற்றுக்கு மாற்றாக மூலிகை தேநீரை உணவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது என மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அந்த வகையில், வெந்தய தேநீர் (Fenugreek Tea) குளிர்காலத்தில் உடலுக்கு பல நன்மைகளை வழங்கும்.
குளிர்காலத்தில் உடலை ஆரோக்கியமாகவும், நோய்களிலிருந்து பாதுகாப்பாகவும் வைத்திருக்க வெந்தய தேநீர் ஒரு எளிய மற்றும் இயற்கையான தீர்வாக உள்ளது.
குளிர்காலத்தில் வெந்தய தேநீர் குடிப்பதன் நன்மைகள்
குளிர்காலத்தில் சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொற்றுநோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்க வெந்தய தேநீர் உதவுகிறது. வெந்தயத்தில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின் C உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, வைரஸ் மற்றும் பாக்டீரியா தாக்குதல்களை குறைக்க உதவுகின்றன.
குளிர்காலத்தில் மலச்சிக்கல், வயிற்று வீக்கம், அமிலத்தன்மை போன்ற செரிமான பிரச்சினைகள் அதிகமாக ஏற்படுகின்றன. வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும் தன்மை குடலின் செயல்பாட்டை சீராக்கி, உணவு நன்றாக செரிய உதவுகிறது. அஜீரணப் பிரச்சனை உள்ளவர்கள் காலை வெறும் வயிற்றில் அல்லது இரவில் வெந்தய தேநீர் குடிப்பது நல்லது.
வெந்தய தேநீரில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் தொண்டை எரிச்சல், சளி அடைப்பு, மூச்சுத் திணறல் போன்ற பிரச்சினைகளை குறைக்க உதவுகின்றன. இது தொண்டையை மென்மையாக்கி, சுவாச பாதையை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. குளிர்காலத்தில் அடிக்கடி இருமல் தொந்தரவு உள்ளவர்கள் இதை தினசரி குடிக்கலாம்.
வெந்தய விதைகள் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்திருக்க உதவுவதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. குளிர்காலத்தில் உணவு பழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு சவாலாக இருக்கலாம். அத்தகையவர்கள் மருத்துவர் ஆலோசனையுடன் வெந்தய தேநீரை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
குளிர்காலத்தில் உடல் இயக்கம் குறைவதால் எடை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால், எடை குறைக்க முயற்சிப்பவர்கள் தங்களின் தினசரி உணவுப் பழக்கத்தில் வெந்தய தேநீரை சேர்த்துக்கொள்ளலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.)
