ஆடுகள் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய விவசாயி

221
Advertisement

ஆடுகள் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய விவசாயியின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜெர்மன் நாட்டில் தற்போது ஓமிக்ரான் வைரஸ் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. இதனால், அங்கு இரவு நேரக் கிளப்புகள், நடனங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. அங்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 70 சதவிகிதத்தைத் தாண்டியுள்ளது. அதேசமயம், 5 முதல் 10 சதவீத ஜெர்மனியர்கள் தடுப்பூசிக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருப்போர் உடனே தடுப்பூசி செலுத்திக்கொள்ள செம்மறி ஆடுகளை சிரிஞ்ச் வடிவில் நிற்கவைத்து, உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார் ஷ்மித் கோச்சன் என்னும் விவசாயி.

கடந்த ஜனவரி 3 ஆம் தேதி ஹாம்பர்க்கிற்குத் தெற்கே ஷ்னெவர்டிங்கன் பகுதியில் ஒரு வயல்வெளியில் தனது 700 செம்மறியாடுகளை 330 அடி சிரிஞ்ச் வடிவில் நிற்க வைத்து புதுமையை நிகழ்த்தியுள்ளார்.

இதற்காக பல நாட்கள் ஆடுகளுக்குப் பயிற்சியளித்து வந்துள்ளார். இறுதியாக கடந்த திங்கள்கிழமை அன்று சிரிஞ்ச் வடிவில் ரொட்டித்துண்டுகளை அவர் அடுக்கி வைத்துள்ளார். அதைத் தொடர்ந்து ஆடுகள் அங்குசென்று சிரிஞ்ச் வடிவில் நிற்கத் தொடங்கின. இது காண்போரின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

இன்னும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளத் தயங்கும் நபர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக விவசாயி மேற்கொண்டுள்ள இந்தப் புதுமையான செயல் எதிர்பார்க்கும் பலனைத் தருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.